உலகம்

கிரே எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் பாகிஸ்தான்  

பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியை தடுக்க தவறியதால் பாகிஸ்தான் நாடு, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கிரே பட்டியலில் நீடிக்கிறது.  

Malaimurasu Seithigal TV

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.  பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாகப் பிரிக்கிறது.

கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள் ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன் நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக் கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள் எந்த நேரத்திலும், கருப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன.  இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம்.

அந்த வகையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்திய எப்ஏடிஎப் அமைப்பு, அந்த நாட்டை கிரே பட்டியலில் வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எப்.ஏ.டி.எப். அமைப்பின் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் நீட்டித்து எப்ஏடிஎப் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுப்பது தொடர்பான அந்த அமைப்பின் செயல்திட்டங்களில் பலவற்றை கையாளவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.