கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் பாறைகளைப் பற்றி ஆராய மிகவும் மென்மையான பாறையில் துளையிட்டது. ஆனால் அப்போது மாதிரி நொறுங்கி டைட்டானியம் குழாயின் உள்ளே செல்லவில்லை. ஆனால் இப்போது, செவ்வாய் கிரகத்திற்குச் சென்றுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு கொண்டுவர தனது முதல் பாறை மாதிரியை வெற்றிகரமாக சேகரித்துள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவரின் தலைமைப் பொறியாளர் ஆடம் ஸ்டெல்ட்ஸ்னர் , பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தாக்கில் தரையிறங்கியது. அந்த இடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பசுமையான ஏரி மற்றும் நதி இருந்த இடம் என்று நம்பப்படுகிறது.
பண்டைய வாழ்க்கையின் ஆதாரங்களைக் கொண்டிருக்கும் பாறைகளைத் தேடி சோதனைகளை பெர்சவரன்ஸ் மேற்கொண்டு வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர நாசா அதிக விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.