நடுவானில் வெடித்த விமான டயர்.. அச்சத்தில் கதறிய பயணிகள்! விவேகமாக செயல்பட்ட பயணிக்குழு 
உலகம்

நடுவானில் வெடித்த விமான டயர்.. அச்சத்தில் கதறிய பயணிகள்! விவேகமாக செயல்பட்ட பயணிக்குழு

விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 வகையைச் சேர்ந்தது. இந்த விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன.

மாலை முரசு செய்தி குழு

ஈரானின் மஷ்ஹத் நகரில் இருந்து கெர்மன்ஷா நகருக்குப் பறந்த செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, வானில் பறந்த சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி தரையிறங்கியுள்ளது.

நடுவானில் பறந்தபோது லேண்டிங் கியரில் இருந்த டயர் வெடித்து, தனியாகக் கழன்று விழுந்ததால் விமானத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் பதற்றம் அடைந்ததால், விமானம் உடனடியாக மீண்டும் மஷ்ஹத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்துக்குள்ளான விமானம் போயிங் 737 வகையைச் சேர்ந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

விமானத்தின் உட்பகுதி கடுமையாக அதிர்ந்து, மேற்புற அலமாரிகள் திறந்து, அதில் இருந்த பொருட்கள் பயணிகள் மீது விழுவதை வீடியோவில் காண முடிகிறது.

இதனால் பதற்றமடைந்த பயணிகள் அச்சத்தில் கத்துவதும், அழுவதும், பிரார்த்தனையில் ஈடுபடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, மஷ்ஹத் விமான நிலையத்திற்கே திரும்ப முடிவு செய்தனர். அங்கு அவசரகால சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

விமானம் திரும்புவதற்கு முன்னதாக, தீயணைப்பு வீரர்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் பிற அவசரகாலப் பணியாளர்கள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர்.

முதற்கட்ட தகவலின்படி பயணிகள் மற்றும் குழுவினர் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை.

விமான போக்குவரத்து அதிகாரிகள் டயர் கழன்றது எப்படி எனக் கண்டறியவும், இது எப்படி அதிகப்படியான அதிர்வுகளுக்கு காரணமாக இருந்தது என்றும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்