உலகம்

"கரிசனம் காட்டிய காலம் முடிந்துவிட்டது" - மனைவி, மகன் கண் முன்பே கொல்லப்பட்ட இந்தியர்.. டிரம்ப் ஆவேசம்!

இதற்கு முன்நாள் அதிபர் ஜோ பைடனின் தவறான கொள்கைகளே காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்..

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியரான சந்திரா நாகமல்லையா என்பவர், கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரால் அண்மையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் ஒரு மோட்டல் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் இந்தியரான சந்திரா நாகமல்லையா. வாஷிங் மெஷின் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ் (Yordanis Cobos-Martinez) என்ற கியூபாவைச் சேர்ந்த நபரால் அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே நடந்தது.

குற்றவாளியான யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸ், ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. குழந்தை பாலியல் வன்கொடுமை, வாகனத் திருட்டு போன்ற குற்றங்களுக்காக அவர் முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் கியூபா நாட்டிற்கு நாடு கடத்த மறுக்கப்பட்டதால், மீண்டும் அமெரிக்காவில் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், "சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான மென்மையான அணுகுமுறை காலம் முடிந்துவிட்டது, இதுபோன்ற குற்றவாளிகள் அமெரிக்காவில் இருக்கவே கூடாது, இதற்கு முன்நாள் அதிபர் ஜோ பைடனின் தவறான கொள்கைகளே காரணம்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், "இந்தக் குற்றவாளிக்கு முழுமையான தண்டனை வழங்கப்படும். முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்படும்" என்று டிரம்ப் உறுதியளித்தார். மேலும், தனது ஆட்சியில் அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக மாற்றுவோம் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.