உலகம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்‌சே தெரிவித்துள்ளார்.

Suaif Arsath

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சியின் விளைவாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்‌சே, அதிபர் கோத்தபய ராஜபக்‌சேவை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்ட அதிபர் கோத்தபய, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து காபந்து அரசை அமைக்க எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கூட்டங்களை நடத்திய அவர், அதிபர் பதவியில் இருந்து தான் விலக போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று கூடிய கூட்டத்தில், அரசியல் கட்சிகள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் ஆதரவு வழங்க போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில் கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிப்பது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.