உலகம்

மரியுபோலை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா.. 959 பேர் சரணடைந்த நிலையில் பலருக்கு படுகாயம்!!

போர் தொடங்கிய 84-வது நாளில் உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்யா முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இரும்பாலையில் இருந்த 959 வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்தனர்.

Suaif Arsath

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா முதலில் தலைநகர் கீவ்வை குறி வைத்தது.

பின்னர் அனைத்து நகரங்களிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ஆனாலும் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை என்றதும், 50 நாட்களுக்குப் பின் போர் வியூகத்தை மாற்றி முழு கவனத்தையும் கிழக்கு உக்ரைனை நோக்கித் திருப்பியது.

குறிப்பாக மரியுபோல் நகரை முக்கிய இலக்காக மாற்றியது. அந்நகரை கைப்பற்றி விட்டால் டான்பாஸ் மற்றும் கிரீமியாவுடன் இணைத்து விடலாம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

ஆனால், மரியுபோல் நகரில் பத்து  கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்த அஸோவ்ஸ்டல் இரும்பாலை ரஷ்யாவுக்கு பெரும் இடையூறாக அமைந்தது. அங்கிருந்த பாதாள அறைகளில் பதுங்கியிருந்து உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதையடுத்து தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா, குண்டு மழை பெய்து ஆலையை தகர்க்கத் தொடங்கியது. உள்ளே இருக்கும் வீரர்கள் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தத் தொடங்கினர். இந்தநிலையில் வீரர்கள் சரணடைந்தால் தாக்குதல் நிறுத்தப்படும் என்று ரஷ்யா அறிவித்தது. அதனை ஏற்று வீரர்கள் சரணடைந்து வருகின்றனர்.