போரின் 17-ம் நாளான இன்று கீவ் நகரையொட்டியுள்ள இடங்களில் ரஷ்ய ராணுவம் முற்றுகையிட்டு தாக்கி வருகிறது. ப்ரோவரியில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கு வாசில் கீவ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவை தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. மருத்துவமனை, பள்ளிகள் என அனைத்துப் பகுதிகளிலும் குண்டு மழை பொழிகிறது. மரியுபோல் நகரில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் திரும்பி வந்தால் வசிப்பதற்கு வீடுகள் இல்லை என்னும் அளவிற்கு கார்கீவ் நகரம் சின்னாபின்னமாகியுள்ளது. இதனிடையே, கீவ் நகருக்குள்ளும் சில கட்டடங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.