உலகம்

யாரெல்லாம் ஹஜ் யாத்திரைக்கு செல்லாம்........ சவுதி அறிவிப்பு

கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 ஆயிரம் சவுதி யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 ஆயிரம் சவுதி யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து உலக நாடுகளும் மிகக் கடுமையாகப் போராடி வருகிறது.கொரோனா பாதிப்பு காரணமாக ஹஜ் புனித பயணத்திற்கு யாத்ரீகர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்த அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தாண்டு ஹஜ் புனித பயணம் வரும் ஜூலை மாத இறுதியில் தொடங்கும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 65 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் எவ்வித இணை நோய்களும் இல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2ஆவது ஆண்டாக, கொரோனா பரவல் காரணமாக ஹஜ் புனித பயணத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்வார்கள். 2019ஆம் ஆண்டு சுமார் 25 லட்சம் பேர் ஹஜ் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், கடந்த ஆண்டு வெறும் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.