அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்துள்ள தோல்வியால், அதிபர் ட்ரம்ப்பை விட அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நபர் என்றால் அது எலான் மஸ்க்தான்.
ஏனென்றால், குடியரசுக் கட்சியினர் வெற்றி பெறுவதற்காக மஸ்க் கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளார். தேர்தலில் இந்த அளவு செலவு செய்வது ஒரு சாதனைதான். ஆனால், எந்தப் பயனும் இல்லை என்றாகிவிட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்க், ட்ரம்ப்பின் தலைமையிலான குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்வதை உறுதிசெய்யும் நோக்கில், குறைந்தது 446 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200 கோடி) பல்வேறு 'சூப்பர் பேக்' (Super PACs) அமைப்புகளுக்கு வாரி வழங்கினார்.
2024-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில்கூட அவர் 290 மில்லியன் டாலர்கள்தான் செலவழித்திருந்தார். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு ஜனநாயகக் கட்சியினர் நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றதால், மஸ்க் கொட்டிய நூற்றுக்கணக்கான கோடிகளுக்குப் பிரதிபலனாக ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மஸ்க்கின் ‘அமெரிக்கா பேக்’ (America PAC) பெருந்தொகையைச் செலவிட்ட 5 முக்கியமான செனட் இடங்களையும் ஜனநாயகக் கட்சியினரே வென்றுள்ளனர்.
மேலும், அவரது தொழில்கள் அமைந்துள்ள டெக்சாஸ் மாகாணத்தில்கூட கூடுதல் கவனத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனாலும், அங்கே செனட், ஆளுநர் பதவி மற்றும் நாடாளுமன்றத்தையும் இழந்தது குடியரசுக் கட்சி.
X தளத்தில் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினரை விமர்சித்தும், தேர்தல் தொடர்பான பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பரப்பியும் வந்த மஸ்க், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்தார். “விண்வெளியில் உள்ள டேட்டா சென்டர்கள்தான் இப்போது நிம்மதியான இடமாகத் தோன்றுகின்றன” என்று மட்டுமே நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.
மேலும், "தேர்தலில் தலையிடும் என்னுடைய செயற்கைக்கோள் லேசர்கள் இந்த முறை வேலை செய்யவில்லை போல" என்று முந்தைய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும் பதிவிட்டிருந்தார்.
இந்தத் தேர்தல் தோல்விகள் மஸ்க்கிற்குப் பொருளாதார ரீதியான இழப்பு மட்டுமல்ல, அரசு அதிகாரிகளுடன் அவர் அனுபவித்துவந்த ‘நெருக்கமான உறவு’ மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்த நிலைக்கும் இதுவே முடிவாக அமையலாம்.
ஜனநாயகக் கட்சி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான மஸ்க், கண்டிப்பான நாடாளுமன்றம் மற்றும் டெக்சாஸ் அரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
டெக்சாஸில் மஸ்க் ஆதரித்த வேட்பாளரை வீழ்த்திய ஜேம்ஸ் தாலாரிகோ, "உலகின் எந்தவொரு கோடீஸ்வரரின் பணப் பலமும் டெக்சாஸ் மக்களின் வாக்கிற்கு ஈடாகாது என்பதை நிரூபித்துவிட்டோம்" எனப் பெருமிதம் கொண்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்