நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் X (முன்பு ட்விட்டர்) உள்ளிட்ட முக்கிய சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு திடீரெனத் தடை விதித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் இளம் தலைமுறையினர் (Gen-Z) தலைநகர் காத்மாண்டுவின் வீதிகளில் திரண்டு, அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக் காலமாக, நேபாள அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் கோபம் அதிகரித்து வந்தது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் போராட்டங்களாக வெடிக்கத் தொடங்கியது. நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பொது அமைதியை நிலைநாட்டவும் இந்த சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது. அரசுக்கு எதிரான வதந்திகள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்ப இந்தத் தளங்கள் பயன்படுத்தப்படுவதாக நேபாளத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இளைஞர்களின் கொந்தளிப்பு
இந்தியா மற்றும் சீனாவின் செல்வாக்கு, அதிகரிக்கும் ஊழல், பொருளாதாரத் தேக்கநிலை, பெருகிவரும் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் நேபாள இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தியை வெளிப்படுத்தவும், போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் சமூக வலைத்தளங்களே அவர்களுக்கு முக்கியக் கருவியாக இருந்தன. தற்போது, அரசு அந்த ஆயுதத்தையும் பிடுங்கிக்கொண்டதால், இளைஞர்கள் வீதிகளுக்கு வந்து நேரடியாகப் போராடத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைத்தளத் தடை என்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று இளைஞர்கள் கருதுகின்றனர். "அரசாங்கத்தின் தோல்விகளை நாங்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறோம், அதனால் அவர்கள் பயந்துவிட்டார்கள். சமூக வலைத்தளங்களை முடக்குவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்குச் சமம்" என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காத்மாண்டுவின் முக்கியப் பகுதிகளில் கூடிய போராட்டக்காரர்களைக் கலைக்க, போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பாய்ச்சியும் போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதில், இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் நேபாளத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடை குறித்து நேபாளத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஞானேந்திர கார்தி, "பொது அமைதியை நிலைநிறுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிகத் தடைதான், நிலைமை சீரானதும் தளங்கள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்" என்று விளக்கமளித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.