உலகம்

ஆப்கானில் பேஸ்புக்கை தொடர்ந்து வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கம்!

ஆப்கானில், பேஸ்புக்கை தொடர்ந்து தலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பின் தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே  பழமைவாத அரசை விரும்பாத பலரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

இந்தநிலையில், புதிய அரசாட்சியை அமைக்க உள்ள தலிபான்கள், தீவிரவாத செயலுக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தலிபான்களால் பிற நாடுகளுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது எனவும் கூறியுள்ளனர். இருப்பினும் இதனை ஏற்க மறுக்கும் பலர், தலிபான்கள் தாங்கள் வாக்குறுதியில் நிலைத்திருக்க மாட்டார்கள் என அங்கு வசிப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே தலிபான்களை தீவிரவாத பட்டியலில் அமெரிக்க வைத்திருக்கும் நிலையில், தலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் நேற்று முடக்கப்பட்டன. ஆனால் அவர்கள் பேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப்பினை பயன்படுத்தி பிற பகுதிகளில் உள்ள ஆதரவாளர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்து வருவதாக தெரியவந்தது.

இந்தநிலையில் அமெரிக்காவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அச்சுறுத்தலுக்கு உரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள தலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.