ஆப்பிரிக்க நாடான கேமரூனில் கடந்த 1986-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம், இன்று நினைத்தாலும் உலகையே நடுக்கமுறச் செய்யும். சமூக வலைதளங்களில் சமீபகாலமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு தகவல், அங்கிருந்த ஒரு ஏரி ஒரே இரவில் 1,700-க்கும் மேற்பட்ட மக்களைக் 'கொலை' செய்ததாகவும், அதை உலகம் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் கூறுகிறது. அன்று இரவு அந்த ஊர் மக்கள் ஒரு மர்மமான சத்தத்தைக் கேட்டுள்ளனர், பின் ஏரியிலிருந்து வெண்ணிறப் புகை எழுவதைப் பார்த்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே பிணமானார்கள். இந்தச் சம்பவம் நடந்த இடம் வடமேற்கு கேமரூனில் உள்ள 'நியோஸ்' (Lake Nyos) என்ற ஏரியாகும்.
அந்தப் பயங்கரமான ஆகஸ்ட் 21, 1986 அன்று இரவு, நியோஸ் ஏரிக்கு அருகே இருந்த கிராம மக்கள் ஒருவித உருமல் சத்தத்தைக் கேட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து காற்றில் அழுகிய முட்டையின் வாசனை வீசியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்த ஏரியிலிருந்து சுமார் 1 லட்சம் முதல் 3 லட்சம் டன் வரையிலான கார்பன் டை ஆக்சைடு வாயு சீறிப்பாய்ந்து வெளியேறியது. காற்றை விடக் கனமான இந்த வாயு, ஒரு கண்ணுக்குத் தெரியாத போர்வையைப் போலப் பள்ளத்தாக்குகளில் இறங்கித் தரையோடு தரையாகப் பரவியது. தூக்கத்தில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி, தாங்கள் இறக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 1,746 பேர் மற்றும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் எந்தவிதப் போராட்டமும் இன்றி அப்படியே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேடான பகுதிகளில் வசித்தவர்கள் மட்டுமே தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் உண்மையா என்று ஆராய்ந்தால், ஆமாம் இது ஒரு அரிய வகை இயற்கைச் சீற்றம் என்று அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். எரிமலை வாயில் உருவான இந்த ஏரியின் அடியில் பல ஆண்டுகளாகத் தங்கியிருந்த கார்பன் டை ஆக்சைடு, ஏதோ ஒரு நிலச்சரிவு அல்லது சிறிய அதிர்வு காரணமாகத் திடீரென வெளியேறி இந்த 'ஏரி வெடிப்பு' (Limnic Eruption) எனும் கொடூரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த ஆய்வுக் குழுவினர் அங்கு வந்து பார்த்தபோது, ஏரியின் நீர் அடர் பழுப்பு நிறமாக மாறியிருந்தது. அந்தப் பகுதியில் இருந்த செடி, கொடிகள் அனைத்தும் தரைமட்டமாகி இருந்தன. வளிமண்டலத்தில் பொதுவாக இருக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவை விட 10 சதவீதம் அதிகமாக அந்தப் பகுதியில் பரவியதுதான் இத்தனை உயிர்கள் பலியாகக் காரணம். மக்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே, அதாவது படுக்கையிலும், வயல்களிலும் சடலமாகக் கிடந்தனர். பூச்சிகள், பறவைகள் என எந்த ஒரு உயிரினமும் அந்த நச்சு வாயுவிடமிருந்து தப்பவில்லை.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, கேமரூனில் உள்ள மற்றொரு ஏரியான 'மோனூன்' (Lake Monoun) என்பதில் இதுபோன்ற வெடிப்பு ஏற்பட்டு 37 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் நியோஸ் ஏரி விபத்து மிகவும் பெரியது. தற்போது இந்த ஏரி ஆபத்தானதா என்று கேட்டால், 2001-ஆம் ஆண்டு முதல் அங்கு ராட்சதக் குழாய்கள் பொருத்தப்பட்டு, அடியில் இருக்கும் வாயுக்கள் சீராக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் அழுத்தம் சேராமல் தடுக்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிரிக்காவின் கிவு (Lake Kivu) என்ற ஏரி இதைவிடப் பெரியது என்றும், அங்கேயும் இதுபோன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இயற்கையின் சீற்றம் எவ்வளவு அமைதியாகவும் அதே சமயம் பயங்கரமாகவும் இருக்கும் என்பதற்கு நியோஸ் ஏரிச் சம்பவம் ஒரு மிகப்பெரிய சாட்சி. ஒரு நீர்நிலை எப்படி எமனாக மாறும் என்பதை கேமரூன் நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் அந்த ஏரி கண்காணிக்கப்பட்டாலும், அன்று உயிரிழந்த 1,700 ஆன்மாக்களின் சோகம் நிறைந்த கதை இன்றும் உலகையே அதிர வைக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்