charlie krik  
உலகம்

டிரம்ப் -க்கு மிகவும் வேண்டப்பட்ட நபர்..! யார் இந்த சார்லி கிர்க்? சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

'டேர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ' (Turning Point USA) என்ற இளைஞர் அமைப்பை அவர்தான் ....

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு மிகவும் நெருக்கமான இளைஞர், வலதுசாரி அரசியல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் ஊடக ஆளுமை என்று பன்முகம் கொண்ட சார்லி கிர்க், யூட்டா மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த சார்லி கிர்க்?

சார்லி கிர்க், அமெரிக்காவின் பழமைவாத அரசியலில் மிகவும் பிரபலமான ஒரு இளைஞர் தலைவர். 'டேர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ' (Turning Point USA) என்ற இளைஞர் அமைப்பை அவர்தான் உருவாக்கினார். இந்த அமைப்பு, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் டிரம்ப்பின் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சென்று, அவர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியை செய்தது. மிக இளைய வயதிலேயே சக்தி வாய்ந்த ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்ததால், பழமைவாத இளைஞர்களின் மத்தியில் கிர்க் ஒரு ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

சார்லி கிர்க், டிரம்ப்பின் கொள்கைகளுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த ஒரு தீவிர ஆதரவாளர். தேர்தல் பிரச்சாரங்கள் முதல் முக்கியமான கூட்டங்கள் வரை, டிரம்ப்பிற்கு பக்கபலமாக கிர்க் இருந்துள்ளார். டிரம்ப் தனது பிரசாரங்களில் கிர்க்கை மேடைகளில் அழைத்து, அவரைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். டிரம்ப் தனது அரசியல் பயணத்தில் இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதற்கு கிர்க்கின் அமைப்பு முக்கியப் பங்காற்றியது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 10), யூட்டா வேலி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிர்க் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு வெளியே, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத நபரால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கிர்க், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து, காவல்துறை உடனடியாக ஒரு நபரை கைது செய்து விசாரித்தது. ஆனால், அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவர, அவரை விடுவித்தனர். தற்போது வரை, உண்மையான குற்றவாளி யார் என்பது குறித்து காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

சார்லி கிர்க்கின் மரணச் செய்தி கேட்ட டிரம்ப், வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருந்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் அவர், "இது அமெரிக்காவிற்கு மிகவும் இருண்ட ஒரு நாள். எனது தோழரும் தேசபக்தருமான சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர் உண்மைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இந்தக் கொடூரமான செயல், இடதுசாரிகளின் அரசியல் வன்முறை கலாச்சாரத்தின் விளைவு" என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இறுதியில், "எனது அரசு, சார்லி கிர்க்கின் கொலையாளிகளை கண்டுபிடித்து, அவர்களை நீதியின் முன் நிறுத்தும்," என்று உறுதியளித்து, கிர்க்கின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.