Afghan Woman Journalist 
உலகம்

"இப்படியே போனா கொன்னுடுவாங்க.." ஆப்கான் பெண் பத்திரிகையாளரின் அந்த ஒரு கேள்வி - சர்ச்சைக்குரிய சைகை செய்த பாக். அமைச்சர்!

பெண் பத்திரிக்கையாளரின் ஆடைகளைச் சுட்டிக்காட்டி, "இப்படி" ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Vinvizhi Leninton

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ​​பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் செய்த சைகை தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தலிபான்கள் மீதான பாகிஸ்தானின் கொள்கை மற்றும் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் குறித்த நிலைப்பாடு பற்றியும் அந்தப் பத்திரிகையாளர் ஆசிஃபிடம் கேள்வி எழுப்பினார்.

அதில் அவர், "பெண்கள் மீதான தலிபான்களின் கொள்கைகளை மாற்றுமாறு பாகிஸ்தான் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்குமா?" என்றும், "பாகிஸ்தான் அந்த அமைப்பை ஒரு நண்பராகக் கருதும் பட்சத்தில், ​​தலிபான்கள் பெண்களை நடத்தும் விதத்தை இஸ்லாமாபாத் ஏன் எதிர்க்கவில்லை?" என்றும் அந்த பெண் பத்திரிகையாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

வைரலாக பரவிவரும் காணொளியில், பத்திரிகையாளர் அவரது கேள்வியினை எழுப்பியபோது ஆசிஃப் குறுக்கிட்டார். பின்னர் அவர், அந்த பெண் பத்திரிக்கையாளரின் ஆடைகளைச் சுட்டிக்காட்டி, "இப்படி ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த பத்திரிகையாளர் அந்த உடையில் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினால் 'நீங்கள் கொல்லப்படலாம்' என்பதை உணர்த்துவது போல, ஒரு சைகையையும் காட்டினார். இந்த உரையாடலின் போது பாகிஸ்தான் அமைச்சரைச் சுற்றியிருந்த பலரும் சிரிப்பதையும் காண முடிகிறது.

ஆப்கானியப் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு, பாகிஸ்தானின் மூத்த அமைச்சர் ஒருவர் பதிலளித்த விதம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து இணையப் பயனர் ஒருவர், "பத்திரிகையாளரின் கேள்விக்கு, அமைச்சர் கூறிய பதிலும் செய்கையும் பொருத்தமற்றவை" என்றும், "வன்முறை அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தானுக்குள் வான்வழி மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 10 இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களை "துல்லியமான தாக்குதல்கள்" என பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு ஒருநாள் முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்களுக்குப் பதிலடியாக, இந்த பதில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தாரார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற சைகைகள் என்பது பொதுவெளியில் துணிச்சலாக நின்று கேள்வி கேட்கும் பெண்களை அச்சுறுத்துவது போன்றும், அவர்களை மீண்டும் இதுபோன்று கேள்வி கேட்க கூடாது என்ற பிற்போக்கான நிலைக்கு தள்ளும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்