Trump  
உலகம்

அமெரிக்கா போக ஆசையா? டிரம்பின் அதிரடி முடிவு: மேலும் 20 நாடுகளுக்கு செக்!

நாட்டுப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே...

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம், வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வருவதற்கும் குடியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த தடைப் பட்டியலுடன், இப்போது புதிதாக மேலும் 20 நாடுகளையும், பாலஸ்தீன அதிகார சபையையும் (Palestinian Authority) சேர்த்து டிரம்ப் அதிரடி காட்டியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட இருமடங்காக உயர்ந்துள்ளது.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய நினைப்பவர்கள் மற்றும் அங்கு நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிடுபவர்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாட்டுப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது இந்தத் தடை பாய்ந்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் 19 நாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்திருந்தார். இப்போது அந்தப் பட்டியல் மேலும் விரிவடைந்துள்ளதால், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு மூலம், சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேற்ற விசா (Immigrant Visa) பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது அல்லது சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டன் டி.சி. பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தத் தடைப் பட்டியலை முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளாக உயர்த்தப்போவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலர் கிறிஸ்டி நோம் (Kristi Noem) ஏற்கனவே எச்சரித்திருந்தார். "நமது நாட்டைச் சீரழிக்க நினைப்பவர்களை உள்ளே விட முடியாது" என அவர் மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது இந்த விரிவான தடைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இந்த அதிரடி முடிவால், பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களது அமெரிக்கப் பயணத் திட்டத்தைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, குடும்பங்களுடன் இணைய நினைப்பவர்கள் மற்றும் வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்லக் காத்திருந்தவர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், "அமெரிக்கர்களின் பாதுகாப்பே முக்கியம்" என்பதில் டிரம்ப் நிர்வாகம் மிக உறுதியாக இருக்கிறது.

தடைப் பட்டியலில் உள்ள நாடுகளின் விவரம்:

முழுமையான விசாத் தடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நாடுகளில் ஆப்கானிஸ்தான், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, மியான்மர், சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகியவை அடங்கும். இவை தவிர, வெனிசுலா, கியூபா மற்றும் துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பகுதிநேரத் தடையின்கீழ் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.