இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க வழக்கறிஞரான நவனீதம் 'நவி' பிள்ளைக்கு 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் உலகளவில் எட்டு மோதல்களைத் தீர்த்து வைத்துள்ளதால், நோபல் விருதுக்குத் தான் தகுதியானவர் என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி அவர் பேசியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவனீதம் பிள்ளைக்கு, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்திய அவரது முயற்சிகளுக்காக நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், "தனக்கு பிள்ளையை தெரியாது என்றும், அவர் என்ன செய்திருக்கிறார் என்பது பற்றியும் தெரியாது" என்றும் டிரம்ப் தனது சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், "அவர் வெளிப்படையாகவே இஸ்ரேலை வெறுக்கிறார் என்பதைத் தவிர, அவரைப் பற்றி வேறு யாரும் கேள்விப்பட்டதில்லை" என்றும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
மேலும், டிரம்ப் தான் தீர்த்து வைத்ததாக சில போர்களை குறிப்பிட்டதுடன், உக்ரைன் - ரஷ்ய போரை முடிவிற்கு கொண்டு வர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுவரை, தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளனர். ஒபாமா 2009-ல், தனது பதவிக்காலத்தின் முதல் ஆண்டிலேயே நோபல் அமைதிப் பரிசைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் குழுவைச் சாடிய டிரம்ப், இந்த ஆண்டுக்கான விருது, இதுவரை யாரும் கேள்விப்படாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன் அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்