உலகம்

அமெரிக்கா-ஈரான் மோதல்: இன்னும் முடியவில்லை போர்! டிரம்ப் நடத்திய முக்கிய ஆலோசனையில் நடந்தது என்ன?

அமெரிக்காவிற்கு லாபகரமான ஒரு ஒப்பந்தம் அமைந்தால் மட்டுமே டிரம்ப் அதற்கு ஒப்புக்கொள்வார் என்றும்

மாலை முரசு செய்தி குழு

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் குழப்பம் மற்றும் அமெரிக்க இடைத்தேர்தல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில், ஈரான் விவகாரத்தில் எந்தவொரு இறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு லாபகரமான ஒரு ஒப்பந்தம் அமைந்தால் மட்டுமே டிரம்ப் அதற்கு ஒப்புக்கொள்வார் என்றும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.

ஈரான் தனது அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியில் போடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும், அமெரிக்கா மீதான கடல்வழித் தடையை நீக்க வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை டிரம்ப் முன்வைத்துள்ளார். அதுவரை ஈரான் கோரும் எந்தவொரு பணப் பரிமாற்றமும் நடைபெறாது என்றும் அவர் கூறியுள்ளார். ஈரானின் 12 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் முன்வைத்துள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

ஈரான் தரப்போ, அமெரிக்காவுடன் இன்னும் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும், தற்போதைய சூழலில் போரை நிறுத்துவதே தங்களின் முதன்மையான நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது ஈரான் மற்றும் ஓமானின் தனிப்பட்ட உரிமை என்று கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்கப்போவதில்லை என மறைமுகமாக எச்சரித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் சலுகைகளைப் பெற முடியாது, ஏவுகணைகள் மூலம் மட்டுமே உரிமை கிடைக்கும் என ஈரான் தரப்பு கடும் போக்கை கடைபிடிக்கிறது.

குறிப்பாக, ஈரானின் அணு ஆயுத இருப்பு, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது, இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவில் முரண்பாடுகள் நீடிக்கின்றன. குறிப்பாக, கடந்த காலங்களில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியதால், தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரான் எந்தவித நம்பிக்கையும் கொள்ளவில்லை.

ஏப்ரல் 8-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளாலும் தொடர்ந்து மீறப்பட்டு வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்துள்ளன. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், பேச்சுவார்த்தை எப்போது சுமூகமாக முடியும் என்பது பெரும் கேள்வியாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.