ஐரோப்பாவில் வாழுறது பல இந்தியர்களுக்கு ஒரு கனவு. இப்போ ஜெர்மனி இப்போ ஒரு புது கதவை திறந்து வைச்சிருக்கு. இந்தக் கட்டுரையில, ஜெர்மனியின் ஃப்ரீலான்ஸ் விசாவைப் பற்றி பார்ப்போம்.
ஜெர்மனியின் ஃப்ரீலான்ஸ் விசா (Freiberufler Visa) ஒரு ரெசிடென்ஸ் பெர்மிட், இது ஐரோப்பிய யூனியன் இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள் (நம்மை மாதிரி இந்தியர்கள்) ஜெர்மனியில் சுயமாக வேலை செய்யவும், சட்டப்படி வாழவும் உதவுது. சுற்றுலா விசாவைப் போல இது வேலை செய்ய அனுமதிக்காது, வேலை விசாவைப் போல வேலைப் பார்க்க முழுநேர நிறுவனம் தேவையில்லை. இந்த விசா, “லிபரல் புரொஃபெஷன்ஸ்” (Liberal Professions) எனப்படுற தொழில்களுக்கு உகந்தது—அதாவது, கிரியேட்டிவ் துறைகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கன்சல்டன்ட்கள் மாதிரியானவங்களுக்கு.
விசாவின் காலம்: முதலில் ஒரு வருடத்துக்கு வழங்கப்படுது, ஆனா நீங்க தொடர்ந்து ஃப்ரீலான்ஸ் வேலை செய்யுறீங்க, வருமானம் இருக்குனு காட்டினா, இதை மூணு வருடம் வரை நீட்டிக்கலாம்.
நிரந்தர குடியுரிமை: ஐந்து வருடங்கள் தொடர்ந்து தங்கி, தேவைகளை பூர்த்தி செஞ்சா, நிரந்தர குடியுரிமைக்கு (Permanent Residency) விண்ணப்பிக்கலாம்.
ஐரோப்பிய விசாக்கள் இந்தியர்களுக்கு பொதுவா நிறைய கட்டுப்பாடுகளோடு வரும்— நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப், குறுகிய கால விசாக்கள் உள்ளிட்டவை. ஆனா, ஜெர்மனியின் ஃப்ரீலான்ஸ் விசா இந்த பாரம்பரிய கட்டுப்பாடுகளை உடைக்குது.
ஐரோப்பாவில் ஒரு வருடம் தங்கலாம்: ஜெர்மனியை மையமா வைச்சு, சட்டப்படி வாழலாம்.
சுயமாக வேலை செய்யலாம்: ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள கிளையன்ட்களுக்கு சட்டப்படி இன்வாய்ஸ் அனுப்பி வேலை செய்யலாம்.
ஷெங்கன் பயணம்: 180 நாட்களில் 90 நாட்கள் வரை ஷெங்கன் பகுதி நாடுகளில் பயணிக்கலாம்.
நீட்டிப்பு மற்றும் நிரந்தர குடியுரிமை: விசாவை நீட்டிக்கலாம், ஐந்து வருடங்களுக்கு பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
வாழ்க்கை அனுபவம்: இது சுற்றுலா அல்லது குறுகிய பயணத்துக்கு மட்டுமல்ல. ஒரு வருடமோ அதுக்கு மேலோ ஐரோப்பாவில் வாழ்ந்து, வேலை செய்ய, மொழி கத்துக்க, கலாச்சாரத்தை அனுபவிக்க இது ஒரு வாய்ப்பு.
இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க, உங்களோட தொழில் ஜெர்மனியில் “லிபரல் புரொஃபெஷன்” (Liberal Profession) என்ற வரையறைக்குள் வரணும். இந்த தொழில்கள் பொதுவா அறிவுசார், கிரியேட்டிவ், அல்லது சிறப்பு திறமை தேவைப்படுறவை. இதுக்கு வணிக உரிமம் (Business License) தேவையில்லை.
பத்திரிகையாளர்கள் மற்றும் ஃபோட்டோ ஜர்னலிஸ்ட்கள்
எழுத்தாளர்கள், எடிட்டர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இன்டர்ப்ரெட்டர்கள்
கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், சர்வேயர்கள்
வீடியோ கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், டிசைனர்கள்
ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்
வழக்கறிஞர்கள், பேடன்ட் ஏஜென்ட்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள்
மருத்துவ மற்றும் சிகிச்சை நிபுணர்கள் (ஃபிசியோதெரபிஸ்ட்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள்)
குறிப்பு: ஐடி அல்லது வணிக சேவைகளில் (IT or Business Services) இருப்பவர்கள் இந்த விசாவுக்கு பதிலாக “செல்ஃப்-எம்பிளாய்மென்ட் விசா” (Gewerbetreibende) விண்ணப்பிக்க வேண்டியிருக்கலாம்.
ஜெர்மனி ஆவணங்கள் விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்கு. ஃப்ரீலான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்க, நீங்க நிதி ரீதியா சுயமாக இருக்க முடியும்னு காட்டணும், உங்களோட தொழில் தகுதியையும் நிரூபிக்கணும்.
இதோ முக்கிய ஆவணங்களின் பட்டியல்:
Valid பாஸ்போர்ட்: கடந்த 10 வருடங்களில் வழங்கப்பட்டு, குறைந்தபட்சம் இரண்டு காலி பக்கங்கள் இருக்கணும்.
வருமான ஆதாரம்: மாதம் தோராயமாக 1,280 யூரோக்கள் (சுமார் 1.27 லட்சம் ரூபாய்) இருக்கணும்னு காட்டணும்.
தொழில் தகுதி ஆதாரம்: பல்கலைக்கழக பட்டம் அல்லது தொழில் தொடர்பான சான்றிதழ்கள்.
ஃப்ரீலான்ஸ் வேலை ஆதாரம்: கிளையன்ட்களிடமிருந்து லெட்டர் ஆஃப் இன்டென்ட் (Letter of Intent) அல்லது ஏற்கனவே செய்யுற ப்ராஜெக்ட்களின் ஆவணங்கள்.
விரிவான ஃப்ரீலான்ஸ் பிசினஸ் பிளான்: உங்களோட தொழில் திட்டம், வருமான உத்தி, மற்றும் கிளையன்ட்கள் பற்றி விளக்கமான திட்டம்.
விரிவான சி.வி (CV): உங்களோட கல்வி, வேலை அனுபவம், மற்றும் திறமைகளை விளக்குறது.
ஜெர்மனியில் செல்லத்தக்க ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஃப்ரீலான்ஸ் வேலைக்கு ஏற்ற இன்ஷூரன்ஸ்.
ஜெர்மனியில் தங்குமிட ஆதாரம்: வாடகை ஒப்பந்தம் அல்லது தங்குமிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்: கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டவை.
45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு: பென்ஷன் பிளான் ஆவணங்கள்.
விசா கட்டண ரசீது: 75 யூரோக்கள் (சுமார் 7,500 ரூபாய்).
டிப்: சில ஆவணங்கள் ஜெர்மன் மொழியிலோ அல்லது அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்போ தேவைப்படலாம். இதை எம்பசி அல்லது கான்சுலேட்டில் உறுதி செய்யுங்க.
இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க, இந்தியாவில் ஆவணங்களை தயார் செய்யணும், ஜெர்மனியில் சில நடவடிக்கைகளை முடிக்கணும். இந்திய பயணிகளுக்கான படிப்படியான வழிகாட்டி இதோ:
நேஷனல் டி விசா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யுங்க: இதை பிரிண்ட் எடுத்து வைச்சுக்கோங்க.
ஜெர்மன் எம்பசி அல்லது கான்சுலேட்டில் அப்பாயிண்ட்மென்ட் புக் செய்யுங்க: இந்தியாவில் உள்ள உங்களுக்கு அருகிலுள்ள எம்பசியை தொடர்பு கொள்ளுங்க.
தேவையான ஆவணங்களை தயார் செய்யுங்க: வருமான ஆதாரம், பிசினஸ் பிளான், ஹெல்த் இன்ஷூரன்ஸ் உள்ளிட்டவை.
நேரடி அப்பாயிண்ட்மென்டுக்கு செல்லுங்க: இதில் உங்களோட பயோமெட்ரிக் தகவல்கள் (கைரேகை, புகைப்படம்) பதிவு செய்யப்படும்.
ஜெர்மனிக்கு சென்ற பிறகு: இரண்டு வாரங்களுக்குள் உங்களோட முகவரியை பதிவு செய்யணும் (Anmeldung).
குறிப்பு: நேஷனல் டி விசா உங்களை ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்குது. ஆனா, நீண்ட காலம் வாழவும், வேலை செய்யவும் ரெசிடென்ஸ் பெர்மிட் தேவை.
விசா கட்டணம் (75 யூரோக்கள்) பெரிய செலவு இல்லை, ஆனா ஜெர்மனியில் வாழ்க்கை செலவு அவ்வளவு குறைவு இல்லை. ஆனாலும், இங்கே வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, மற்றும் வசதிகள் மதிப்பு மிக்கவை.
வாடகை (பகிரப்பட்ட வீடு அல்லது WG): 300 முதல் 600 யூரோக்கள்
மளிகை பொருட்கள்: 150 முதல் 200 யூரோக்கள்
பயண பாஸ்: 49 முதல் 90 யூரோக்கள்
இன்டர்நெட்/ஃபோன்/யூட்டிலிட்டிஸ்: 100 யூரோக்கள்
பிற செலவுகள்: 100 முதல் 200 யூரோக்கள்
மொத்த மாதாந்திர பட்ஜெட்: 800 முதல் 1,200 யூரோக்கள்
இதோடு, ஒரு வருடத்துக்கு சுமார் 11,208 யூரோக்கள் (சுமார் 10 லட்சம் ரூபாய்) நிதி ஆதாரமாக காட்டணும்.
நீங்க தொடர்ந்து ஃப்ரீலான்ஸ் வேலை செய்யுறீங்க, பொருளாதார ரீதியா சுயமாக இருக்குறீங்கனு காட்டினா, விசாவை நீட்டிக்கலாம். சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி:
நீண்ட கால ரெசிடென்ஸ் பெர்மிட்க்கு விண்ணப்பிக்கலாம்.
முழுநேர வேலைக்கு மாறி EU Blue Card-க்கு விண்ணப்பிக்கலாம்.
ஐந்து வருட தொடர் வாழ்க்கைக்கு பிறகு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனா, உங்களோட வருமானம் நிலையாக இல்லைனா அல்லது ஃப்ரீலான்ஸ் வேலை குறைஞ்சா, நீங்க உங்களோட சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டியிருக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.