AI காலத்துக்குள் நுழைகிறது நம் பூமி. இது நமக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தப்போகிறதா என்பதை ஆராயும் முன்னரே, அதன் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
செயற்கை நுண்ணறிவை சரியாகப் பயன்படுத்தும்போது, அது நம்மிடம் உள்ள சிறிய குற்றங்களைச் சுட்டிக்காட்டும். அதைத் திருத்திக்கொண்டு முன்னேற முடியும். ஆனால், நம்மிடம் உள்ள குறைகளைக் களையாமல் AI சகாப்தத்துக்குள் நுழைவது, அதனால் ஏற்படும் பாதிப்பை பல மடங்கு பெருக்கிவிடும்.
இன்றைய உலகம் தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் பாதையில் செல்கிறதா என்றால், பெரும் கேள்விக்குறிதான் என்கிறார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ்!
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகை ஒரு நியாயமான இடமாக மாற்றுவது எப்படி? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியைக் குறைப்பது எப்படி? AI உருவாக்கும் தீங்குகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை நாம் எப்படி பாதுகாக்கப்போகிறோம்?
இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரை, AI தொழில்நுட்பம் ஏழை - பணக்காரர் இடைவெளியைக் குறைக்கப் பயன்படுத்தப்படப்போகிறதா அல்லது அதை இன்னும் மோசமாக்கி உலகை இன்னும் மோசமான இடமாக மாற்றப் போகிறதா என்ற கோணத்தில் ஆராய்கிறது. அதன் தமிழ்படுத்தப்பட்ட வடிவம் இதோ...
என் மொத்த வாழ்க்கையிலும் இரண்டு வேலைகளைச் செய்து வந்திருக்கிறேன். ஒன்று, மைக்ரோசாப்ட் மூலம் மக்களுக்கு தேவையான மென்பொருள்களைத் தயாரித்தது. இரண்டாவது, அதில் சம்பாதித்த பணத்தை உலகை ஆரோக்கியமான, சிறந்த கல்வி பெற்ற மற்றும் சமத்துவமான இடமாக மாற்றுவதற்காகச் செலவு செய்வது. இந்த இரண்டு வேலைகளுமே AI பற்றிய என்னுடைய கண்ணோட்டத்தை உருவாக்கியிருக்கின்றன.
என்னுடைய 13 வயதில் கணினி பற்றி தெரிந்துகொண்டபோது, மனிதர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளை அதிக அறிவாற்றலுடன் செய்பவையாக அவற்றை உருவாக்கும் எண்ணத்தால் கவரப்பட்டேன். நான் பிறந்த காலத்தில் இருந்தே AI என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும், தொழில்நுட்பம் கடந்த 10 ஆண்டுகளில்தான் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. முதன்முறையாக AI மனித அறிவாற்றலுக்கு மாற்றாகவும், அதை விஞ்சும் அளவுக்கும் வளர்ந்துள்ளது.
சமத்துவம் பற்றி பேசும்போது, AI இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த சமப்படுத்தியாக (equalizer) இருக்கலாம் அல்லது மோசமான அநீதி இழைக்கும் கருவியாக இருக்கலாம். எல்லாம் மிகச் சரியாகச் சென்றாலும், நாம் AI காலத்துக்குள் நுழையும் இந்தத் தருணம் மனித வரலாற்றிலேயே கொந்தளிப்பானது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகை ஒரு நியாயமான இடமாக மாற்றுவது எப்படி? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியைக் குறைப்பது எப்படி? AI உருவாக்கும் தீங்குகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை நாம் எப்படி பாதுகாக்கப்போகிறோம்? தங்கள் வாழ்வாதாரமும், எதிர்காலமும் தங்கள் கையில்தான் உள்ளது என்ற உணர்வை இழந்து வருபவர்களை எப்படி பாதுகாக்கப்போகிறோம்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும், அதன்படி செயல்படுவதற்குமே இன்றைய உலகின் உச்சகட்ட முன்னுரிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உலகம் சரியான அடிகளை எடுத்து வைத்தால், செயற்கை நுண்ணறிவு ஒரு நல்சக்தியாக விளங்கி, அனைவரையும் மேம்படுத்தும்.
துரதிர்ஷ்டவசமாக, நாம் அதற்குத் தயாராக இல்லை. தலைவர்கள், நிபுணர்கள், சமூகங்கள் எதுவும் எதிர்வரும் சவால்களைச் சரியாக எதிர்கொள்வதற்கான சான்றுகளை நான் காணவில்லை. செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் நுழைவதை எளிதாக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை.
இதற்கு ஒரு முக்கிய காரணம், பல விமர்சகர்கள் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். அதற்கான காரணங்களைச் சொல்கிறேன்...
AI இப்போதும் தவறுகளைச் செய்கிறது. சில நாட்களுக்கு முன்புவரை, சாதாரண சுடோகு புதிரை விடுவிக்க முடியாததாகவும், strawberry என்ற சொல்லில் எத்தனை R உள்ளது எனச் சொல்ல முடியாததாகவும் இருந்த AI, மனித அறிவாற்றலுக்கு மாற்றாக அமையும் எனக் கற்பனை செய்வது கடினமானதுதான்.
ஆனால், AI மீதான நம்பகத்தன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும்படி, அதன் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள் தங்களது தவறுகளைத் தாங்களே சரிசெய்துகொள்ளும் AI மாதிரிகளை உருவாக்கியிருக்கின்றனர். விரைவில், அவை பல பணிகளில் மனிதர்களைவிட சிறந்தவையாக ஆகும்.
மக்கள் செயற்கை நுண்ணறிவைக் குறைத்து மதிப்பிடுவதற்கு மற்றொரு காரணம், கடந்தகால கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட மாற்றங்களுடன் ஒப்பிடுவதுதான். மனிதனைப் போல சிந்திக்கவும் நடந்துகொள்ளவும் முடியக்கூடிய தொழில்நுட்பத்துடன் நமக்கு எந்தவிதமான முன் அனுபவமும் கிடையாது.
கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது, நாம் செயல்படும் விதத்தை அது மாற்ற 20 ஆண்டுகள் ஆனது. மென்பொருள்களை உருவாக்க வேண்டியிருந்தது, விலைவாசி குறைய வேண்டியிருந்தது மற்றும் மக்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது, தங்கள் வணிகத்தில் எப்படிப் பொருத்துவது என்பதைக் கண்டறிய வேண்டியிருந்தது. ஆனால், AI நாம் ஏற்கெனவே வைத்திருக்கக்கூடிய சாதனங்களில் செயல்படத் தொடங்கிவிட்டது. நாம் அதற்கு ஏற்றதுபோல மாற வேண்டியதில்லை; அதுவே நமக்கு ஏற்றதுபோல தன்னைப் பொருத்திக்கொண்டுள்ளது. அது சாதாரண மொழியில் பேசுகிறது. அதனால், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அதே பயிற்சி வீடியோவைப் பார்க்க முடியும். இதுவரை இருக்கிற அத்தனை தரவுகளில் இருந்தும் கற்றுக்கொள்ள முடியும்.
AI என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதைக் கடந்து, மனிதருக்கு மாற்றாகச் செயல்படக்கூடிய ஒன்றாக உள்ளது என்பதை கேட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
தொழில்நுட்பத் துறையிலிருந்து நான் பெருமளவில் பயனடைந்துள்ளேன். இன்றளவும் எனக்கு அங்கிருந்து நிதி ரீதியான பயன் கிடைக்கிறது. கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் என்ற எனது பொறுப்பில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உண்மையாகவே பயனளிக்கும் வழிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் முயற்சியில், நான் மைக்ரோசாப்ட் மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
எனக்காகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நான் AI பற்றி பேசவில்லை. என்னுடைய லாபம் எல்லாமும் கேட்ஸ் அறக்கட்டளை வழியாக உலகளாவிய சமத்துவமின்மையைச் சரிசெய்யவே பயன்படுத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.
மனித குலத்துக்கு மாற்றங்கள் புதிது அல்ல. நெருப்பு, சக்கரம், புத்தகம் என வரலாற்றைப் புரட்டிப்போடும் கண்டுபிடிப்புகளையும், அவை ஏற்படுத்திய விளைவுகளையும் ஏற்கெனவே கடந்து வந்துள்ளோம். மிகச் சமீபத்தில் தொழில் புரட்சி மற்றும் கணினிப் புரட்சிகளைக் கடக்கும்போதுகூட இத்தனை பதற்றம் ஏற்படவில்லை. ஆனால், AI என்பது மனிதரால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதைக் கடந்து, மனிதருக்கு மாற்றாகச் செயல்படக்கூடிய ஒன்றாக உள்ளது என்பதை கேட்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அவரது பதிவில், "என் நினைவு தெரிந்த நாள் முதல், நான் புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக நடக்க வேண்டும் என்றே விரும்பியிருக்கிறேன். ஆனால், AI விஷயத்தில் எனது உணர்வுகள் மிகவும் சிக்கலாக உள்ளன.
நமக்கு ஏற்படப்போகும் நன்மைகள் விரைவில் கிடைக்க வேண்டும், பிரச்சனைகளை முடிந்தவரை தாமதப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். நிதர்சனத்தில் நன்மையும் தீமையும் ஒரே நேரத்தில் வருகின்றன.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்குத் தயாராக நமக்கு அவகாசம் தேவை. யாருக்கு அதிக அவகாசம் தேவையோ, அவர்களுக்கே குறைந்த நேரம் உள்ளது. உதாரணமாக, ஒரு அக்கவுண்டிங் ஊழியர். அவர் ஒரு பாட் (தானியங்கி) அல்லது ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர் சம்பளம் பெறும் ஒரு தொழிலாளியால் மாற்றப்படுவார். அந்தத் தொழிலாளி 10 டாலர் செலவாகும் ரோபோட்டுக்கு தனது வேலையை இழந்தவராக இருப்பார்.
பலர் இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் முந்தைய ஒன்றைப் போலவே இருப்பதாகக் கருதுகின்றனர். அமெரிக்கா விவசாயத்தில் இருந்து அலுவலக வேலைகளுக்கு மாறியதைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், அந்த மாற்றம் சில தலைமுறைகளில் நடந்தது. அத்துடன், மனித அறிவாற்றல் தேவைப்படும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் மனித அறிவாற்றலுக்கு மாற்றான ஒன்றாக வளர்ந்திருக்கிறது.
ரோபோட்களும் AI-யும் இணைவது ஒரு கொடூரமான சுழற்சியை உருவாக்கும்.
ஏனென்றால், இதனால் பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது, பேச முடிகிறது, ஒரு நிகழ்வுக்கான காரணத்தை விளக்க முடிகிறது, விரைவில் மனிதனைப் போலவே உடல் உழைப்பிலும் ஈடுபட முடியும். இது ஒரு துறையை மட்டுமே பாதிக்கக்கூடியது அல்ல. சட்டம், வாடிக்கையாளர் சேவை, மருத்துவம், மென்பொருள் மற்றும் உற்பத்தி என அனைத்திலும் உள்ள வேலைகளை எடுத்துக்கொள்ளும். இது சில தலைமுறைகளில் அல்லாமல், ஒரு தசாப்த காலத்திற்குள் இந்தத் தொழில்துறைகளை வேகமாகப் பாதிக்கும். சில புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், ஆனால் சரியான கொள்கைகள் இல்லாவிட்டால், இன்று இருப்பதைவிட மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கும்.
உலகம் முழுவதும் AI வளர்ச்சியை மட்டுப்படுத்தும் சரியான திட்டத்துடன் யாராவது வந்தால், நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஆனால், அது நடக்கும் எனத் தோன்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் AI முழு வேகத்தில் முன்னேறுவதற்கு மிகவும் கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றன.
இந்தப் புத்தம்புதிய தொழில்நுட்பத்தின் நேர்மறையான விளைவுகளை நாம் அதிகப்படுத்தி, தீய விளைவுகளைக் குறைத்து, ஒட்டுமொத்தமாக நாம் சிறந்த நிலையில் இருப்பதை உறுதிசெய்ய, அதன் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகிய இரண்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நான் அபாயங்களிலிருந்து தொடங்குகிறேன்.
இந்த 3 பெரிய அபாயங்களைப் பற்றி நான் விரிவாகப் பின்னாட்களில் எழுதுவேன். இப்போது சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
1944-ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டபோது, அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 25% ஆக இருந்தது. அடுத்த சில தசாப்தங்களுக்கு அது இரட்டை இலக்கத்திலேயே இருந்தது. தேவைகள், முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் மீண்டது.
AI இந்த அளவுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், இதனால் ஏற்படும் தாக்கங்கள் ஒரு பொருளாதாரச் சுழற்சியில் நீங்கிவிடாது. இப்போது ஆபத்தில் இருப்பது எல்லாம் தொடக்கநிலை மற்றும் இடைநிலை வேலைவாய்ப்புகள். ஆனால், உருவாகும் வேலைவாய்ப்புகளை நிரப்பத் தேவைப்படும் திறன்கள் தசாப்தகால அனுபவத்தைக் கோரக்கூடியவை அல்ல.
குறிப்பாக, வெள்ளை-காலர் வேலைகளில் இதன் தாக்கம் அபாரமாக இருக்கும். ஏற்கெனவே generative AI தொழில்நுட்பத்தைப் பல வகைகளில் நாம் ஏற்றுக்கொண்டதால், இளைஞர்கள் பணியாற்றும் தொடக்கநிலை வேலைவாய்ப்புகள் பெருமளவில் சரிந்துள்ளன.
இந்த நிலை இன்னும் தொடரும் என்றே நினைக்கிறேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு துறைகளும் வேலைகளும் மட்டுமே இதனால் பாதிக்கப்படாது. விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை (இணையம் மற்றும் தொலைபேசி வாயிலான), மென்பொருள் பொறியியல் மற்றும் சட்ட உதவியாளர் பணிகள் ஆகியவை முதலில் பாதிக்கப்படலாம். ஆனால், அத்துடன் நிற்காது. கடன் விண்ணப்பங்களை மதிப்பிடுவது, தரவுப் பகுப்பாய்வு செய்வது, நோயாளிகளை வகைப்படுத்துவது போன்ற, இன்றுவரை பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவைப்படும் பணிகளை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும்போது, இந்த மாற்றம் இன்னும் பரந்த அளவில் சென்றடையும்.
நீல-காலர் வேலைகளும் நிச்சயம் பாதிக்கப்படும். AI போலவே ரோபோட்களும் வேலைகளை ஆக்கிரமிக்கும். விரைவில் அதன் விலைவாசி நம்பமுடியாத அளவு குறையும். சீனா போன்ற நாடுகளில் ரோபோட்கள் எவ்வளவு வேகமாக வளருகின்றன என்பதை பல அமெரிக்கர்கள் இன்னும் உணரவே இல்லை. அவர்கள் ரோபோட்கள் அசிங்கமாக நடனமாடும் வைரல் வீடியோக்களால் குழம்பிப்போயிருக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் செயல்திறன் மிக்க எந்திரன்கள் மனிதர்களைப் போலவே கட்டடத் தொழில் முதல் விருந்தோம்பல் துறை வரை நிரம்பியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
ரோபோட்களும் செயற்கை நுண்ணறிவும் இணைவது ஒரு கொடூரமான சுழற்சியை உருவாக்கும். ஒரு நிறுவனம் இவற்றைப் பயன்படுத்தி விலையைக் குறைத்துவிட்டால், அதன் போட்டியாளர்களும் வேறு வழியில்லாமல் அதையே செய்ய நேரிடும். இருக்கக்கூடிய நிறுவனங்கள் எல்லாம் இதைச் செய்யாமல் இருந்தாலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கையில் எடுக்கும். பலர் வேறு வேலைகளுக்கு மாறுவார்கள். ஆனால், வேலையை இழப்பது, மறுபயிற்சி பெறுவது மற்றும் வேறு வேலை தேடுவது ஆகியவற்றால் ஏற்படும் மனக்குழப்பம் தாங்கமுடியாததாக இருக்கும்.
நாம் தலையிடாவிட்டால், ஒன்றிலிருந்து மற்றொன்று, அதிலிருந்து வேறொன்று என மக்கள் தங்களை மாற்றிக்கொண்டே இருக்க சந்தை நிர்பந்திக்கும். இறுதியில், மிகக் குறைவான நல்ல வேலைகளே இருக்கும். அதிலிருந்து மிகச் சிறிய குழுக்களே பயனடைவார்கள்.
குறிப்பாக, மிகக் குறைவான தொடக்கநிலை வேலைகள் மட்டுமே இருக்கும்போது உள்ளே வரும் இளைஞர்களைக் குறித்து நான் மிகவும் கவலைகொள்கிறேன். அவர்கள்தான் அதிகமாக AI-யைப் பயன்படுத்துபவர்கள். அதன் விரைவான வளர்ச்சியையும் வேகமான முன்னேற்றத்தையும் காண்பதால், அவர்களால் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களில் பெரும்பாலோர் செயற்கை நுண்ணறிவு குறித்து எதிர்மறையாக உணர்வதில் ஆச்சரியம் இல்லை.
தொழிலாளர்களுக்கான மிகப் பெரிய மாற்றம், AI பிழைகள் இல்லாமல் வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது நடக்கும். அப்போது மனிதர்கள் சோதிக்கத் தேவையே இல்லாமல், அது தன்போக்கில் வேலைகளைச் செய்யும். இதன்மூலம் நிறுவனங்கள் பெருமளவில் பணம் சம்பாதிக்க முடியும் என்றால், நிச்சயமாக இதை ஏற்றுக்கொள்ளும்.
வேலை, சம்பளம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு பற்றிய நம் அடிப்படைப் புரிதல்களை இது மொத்தமாக மாற்றும். வேலைவாய்ப்பைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள பொருளாதாரம், குறைந்த நபர்கள் வேலை செய்தால் அல்லது அதிக நபர்கள் குறைந்த கால அளவு வேலை செய்தால் எப்படி பாதிக்கப்படும்?
முதலாளித்துவ சமூகத்தில் வேலைவாய்ப்புதான் பெரும்பாலான மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சமூகத்தின் கண்ணியத்துடன் வாழவும் அடிப்படையான ஒன்று.
சமூகத்தில் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவும்போது, அதன் தொடர் விளைவுகள் பரவலாக இருக்கலாம். அமெரிக்காவின் சில பகுதிகளில், தொழிற்சாலைகள் மூடப்படுவது அதீத ஓபியாய்டு பயன்பாட்டால் ஏற்படும் மரணங்களுக்கு காரணமாக இருந்தது என ஆய்வுகள் சொல்கின்றன. நாடு முழுவதும் உள்ள அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சாதாரணப் பணியாளர்கள் ஆகிய இருவர் மீதும் இதே போன்ற அழுத்தங்கள் ஏற்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
இப்போது நாம் வேலைகள் பறிபோவதை எப்படி தடுப்பது எனச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு தரும் பலன்களை எல்லோரும் பகிர்ந்துகொள்ள முடியும். மக்கள் போதிய வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் வரை காத்திருப்பது மிகவும் தாமதமாகிவிடும். நம் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கே சவாலாக உள்ளது செயற்கை நுண்ணறிவு. இதனைத் தடுக்க இப்போதே நாம் சிந்திக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு உருவாவதற்கு நீண்டகாலம் முன்பே, வெடிகுண்டுகள் தயாரிப்பது, உயிரி ஆயுதங்கள் மற்றும் கணினி வைரஸ்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்த தரவுகள் ஆன்லைனில் உள்ளன. AI இந்தத் தரவுகளைப் பெறுவது மட்டுமல்லாமல், செயல்படுத்துவதையும் எளிமையாக்கிவிடும். திறமையில்லாத குற்றவாளிகள்கூட தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது அரசுகளைக் குறிவைக்க முடியும்.
இப்போது நமது அன்றாட வாழ்க்கையில் AI துணையுடன் நடக்கும் மோசடிகள், பரவும் பொய்கள், டீப் ஃபேக், கண்காணிப்புகளால் பலர் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
சைபர் தாக்குதலுக்கு AI திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனக்குத் தெரிந்த புத்திசாலியான சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் ஆபத்துகள் குறித்து அச்சத்தில் உள்ளனர். தாக்குதல் நடத்துபவர்கள் நாளுக்கு நாள் தங்கள் திறன்களைப் பெருக்கிக்கொண்டே செல்கின்றனர். பாதுகாப்பவர்கள் பலவீனங்களைக் கண்டறிந்து சரிசெய்வதைவிட வேகமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
தாக்குதல் நடத்துவது எளிமையாகிவிட்டது. ஒரு AI-ன் எந்தத் திறன் குற்றவாளிகளுக்கு உதவும், அந்தத் திறன் பாதுகாப்பவர்களுக்கு உதவும் என்பதைப் பிரித்தறிய முடியாது.
இதேபோல உயிரி தீவிரவாதமும். AI துணையுடன் ஒரு கொடிய, மரணத்தை விளைவிக்கக்கூடிய நோயை வடிவமைப்பது எளிமையானது. மருந்துகள், தடுப்பூசிகள், நோயை முன்னதாகக் கண்டறிவதில் AI பெருமளவில் உதவினாலும், AI-ன் உதவக்கூடிய திறனையும் தீங்கு விளைவிக்கும் திறனையும் பிரித்தறிவது முடியாத காரியம்.
நான் இப்போது குறிப்பிட்ட அபாயங்கள் யாவும், தற்போது ஒப்பீட்டளவில் திறன் குறைவாக உள்ள தீய சக்திகளுக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு திறன் அளிக்கும் என்பதைப் பற்றியதே ஆகும். இதேபோல, ஏற்கெனவே அதீத திறன் கொண்ட அமைப்புகளுக்கும் AI அதிகாரம் வழங்கும். உதாரணமாக, அரசாங்கங்கள் மனிதர்கள் ஈடுபாடு இல்லாமலேயே கொடூர ஆயுதங்களால் தாக்குதல்களை நடத்த முடியும். பொதுமக்களின் கருத்தைக் கண்காணிப்பதும், அதனை மாற்றுவதும் எளிதாகவும், மலிவாகவும், மேலும் திறம்பட்டதாகவும் இருக்கும்.
AI துணையுடன் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது மனிதர்கள் மற்றும் அமைப்புகளுடன் நிற்காது. சில நேரங்களில் AI அமைப்புகளே அவற்றின் வடிவமைப்பைக் கடந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது பதிவாகியிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் யாரும் எதிர்பாராத, ஆச்சரியமளிக்கும் திசைகளில் முன்னேறி வருகிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்தத் தொழில்நுட்பம் நம் விருப்பத்துக்கு மாறாக செயல்படத் தொடங்கலாம். எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. இதைப் பற்றி வருங்காலத்தில் நான் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.
நான் சியாட்டிலில் வளர்ந்தபோது என்னைப் போலவே இருந்த சில பையன்களைத் தவிர எனக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது. என் அம்மா மிகவும் கடினமாக உழைத்து எனக்கு உதவியதன் மூலம் என்னை விட வித்தியாசமான நபர்களிடம் என்னால் ஓரளவு தொடர்பை உருவாக்க முடிந்தது. இப்போது என் 70 வயதிலும் நான் அந்தப் பாடங்களைப் பின்பற்றுகிறேன்.
அந்த நேரத்தில் எனக்கு ஒரு AI துணை இருந்திருந்தால், இந்த விவகாரத்தில் அவ்வளவு உழைப்பை போட்டிருப்பேனா எனத் தெரியவில்லை. AI உங்களுக்கு ஏற்ற விதத்தில் உங்களுடன் பேசும். உங்களுக்கு வசதியான சூழலை (comfort zone) விட்டு உங்களைத் தள்ளாது. எப்போது வேண்டுமானாலும் அவற்றுடன் பேச முடியும். முக்கியமாக, அவை எப்போதும் உங்களிடம் கோபப்படாது. இதனால் அவற்றுக்கு எளிமையாக அடிமைப்படுவதுடன், நாம் பிற மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்.
இதுகுறித்து பெரிய அளவில் ஆதாரங்கள் இல்லை என்றாலும், நாம் நிச்சயம் கவலைக்கொள்ள வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
செயற்கை நுண்ணறிவைத் துணையாகப் பயன்படுத்தும் 1,100-க்கும் மேற்பட்டோரை உள்ளடக்கிய ஓர் ஆய்வில், ஸ்டான்ஃபோர்ட் மற்றும் கார்னகி மெலன் ஆராய்ச்சியாளர்கள், சிறிய சமூகத் தொடர்புகளைக் கொண்டவர்களே துணைக்காக ஒரு சாட்பாட்டை (chatbot) நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பயன்பாடு எவ்வளவு கணமானதாகவும் உணர்வுரீதியில் பர்சனலானதாகவும் இருந்ததோ, பயனர்கள் அவ்வளவு மோசமாக உணர்ந்தனர்.
குழந்தைகள் இதனால் தங்கள் முழு வாழ்க்கையையும் இழக்க நேரிடலாம். 'Anxious Generation' என்ற நூலில், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து ஜொனாதன் ஹைட் முன்வைக்கும் ஒரு கருத்து, செயற்கை நுண்ணறிவுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகிறது: “காற்றில் வெளிப்படும் இளம் மரங்களைப் போல, வழக்கமாகச் சிறிய அபாயங்களுக்கு ஆளாகும் குழந்தைகள், பீதியடையாமல் மிகப் பெரிய அபாயங்களைக் கையாளக்கூடிய பெரியவர்களாக வளர்கிறார்கள். இதற்கு மாறாக, பாதுகாக்கப்பட்ட பசுமைக்குடிலில் வளர்க்கப்படும் குழந்தைகள், முதிர்ச்சி அடையும் முன்பே சில சமயங்களில் பதட்டத்தால் செயலிழந்து விடுகிறார்கள்.”
உங்களை எப்போதும் கோபிக்காத ஒரு AI துணை என்பது மிகப் பெரிய பசுமைக்குடில்.
குழந்தைகளின் வளர்ச்சியை இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் எப்படி பாதிக்கின்றன என்பதையே நாம் இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம். கட்டாயப் பயன்பாடு (compulsive use), தூக்கம் சீர்குலைவு, இணையவழி கொடுமைப்படுத்துதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பார்த்தால் ஆகியவற்றைக் காண்கிறோம். AI இந்தச் சிக்கல்களை இன்னும் தீவிரப்படுத்தும். இதுகுறித்து சீரியஸாகப் பேச நாம் இன்னொரு தலைமுறை காத்திருக்கக் கூடாது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நார்வே ஆகிய நாடுகள் குழந்தைகளை ஆன்லைனில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீனா இதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது. அதன் சட்டங்கள், செயற்கை நுண்ணறிவுத் துணைச் செயலிகளைப் பெருமளவில் கட்டுப்படுத்துகின்றன, உணர்ச்சி சார்ந்த சார்புநிலையை வளர்க்கும் வடிவமைப்புகளைத் தடை செய்கின்றன, மேலும் சிறார்களுக்கு மெய்நிகர் உறவினர்களையும் காதல் துணைகளையும் தடை செய்கின்றன.
இதேபோல AI கல்வித்துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் நான் கவலை கொள்கிறேன். நமக்கு எக்கச்சக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை வழங்கும் அதே தொழில்நுட்பம் பலரை எதுவும் கற்கவிடாமல் செய்துவிடும். ஒரு ஆய்வில், அளவுக்கு அதிகமாக AI பயன்படுத்துபவர்கள் குறைந்த critical thinking உள்ளவர்களாக இருக்கின்றனர் எனக் கண்டறியப்பட்டது. இதன் தாக்கம் குழந்தைகளில் மிகப் பயங்கரமானதாக இருக்கும்.
நாம் அதிகபட்சமான critical thinking திறனைக் கொண்டிருக்க வேண்டிய காலம் இது. ஏனென்றால், அன்றாடம் ஆயிரம் டீப் ஃபேக் மற்றும் பொய்களைக் கடந்து வரும்போது, எது உண்மை, எது பொய் எனச் சொல்லக்கூடிய திறன் அடிப்படையாக இருக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது.
இந்த உளவியல் சமூகப் பிரச்சினைகள் விஷயத்தில் எனக்கே எல்லைகளை வகுப்பது என்பது தெளிவாக இல்லை. சில நேரங்களில் மனிதர்கள் பிற மனிதர்களுடனான உறவைப் புரிந்துகொள்ள AI உதவலாம். சில வயதானவர்களுக்கு அல்லது நகர முடியாதவர்களுக்கு AI துணை உதவியாக இருக்கலாம். எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு AI பரவாயில்லை எனலாம். அதனால் எல்லையை வகுக்கும் போது, அது நாமே சிந்தித்து எடுத்த முடிவாக இருக்க வேண்டும்.
சிலர் செயற்கை நுண்ணறிவின் பலன்களை மட்டுமே பார்க்கின்றனர். சிலர் ஆபத்துகளை மட்டுமே பார்க்கின்றனர். ஆபத்துகள் உண்மையானவையே. பலன்களை நாம் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்காவிட்டால், அதன் பாதிப்பு மிகப் பெரியதாக இருக்கும்.
நமக்கு AI விளைவிக்கும் தீமைகள் பற்றிய ஆழ்ந்த கவலையும், அதன் பலன்களை எல்லா மக்களுக்கும் பகிரும்போது கிடைக்கும் நன்மைகளைப் பற்றி யதார்த்தமான நம்பிக்கையும் வேண்டும்.
தீமைகளைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல நன்மைகளைப் பெருக்குவதும் முக்கியம். AI தங்களது வாழ்க்கையை எப்படி எளிமையாக்குகிறது என்பதை மக்கள் பார்க்கும்போது, பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டமைப்பது எளிமையானதாக இருக்கும். அப்போதுதான் இந்த மாற்றத்தின் கடினமான பகுதிகளைச் சமாளிக்க முடியும்.
பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் AI செய்யும் முதல் காரியமே அவர்களின் வேலையைப் பறிப்பது என்றால், நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் அதன் நன்மைகளைக் கொண்டு சேர்ப்பது கூட கடினமாகிவிடும். இந்த விஷயத்தில் அரசுகள், மருத்துவம் உள்ளிட்ட தொழில்துறைகள் மற்றும் AI நிறுவனங்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்.
வெவ்வேறு துறைகளின் அறிவைத் தொகுத்து வழங்க முடிவதால், AI மிகக் கடினமான சவால்களைக் கடந்து கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். அனைவருக்கும் தூய்மையான எரிசக்தி வழங்குவது, காலநிலை சவால்களை எதிர்கொள்வது, போதுமான உணவுப்பொருட்களைத் தயாரிப்பது, நோய்களைக் குணமாக்குவதில் AI பெரிய அளவில் பங்களிக்க முடியும். இனி அறிவாற்றல் என்பது கட்டுப்படுத்தப்பட்டது அல்ல. எனவே, சிறிய நிறுவனங்கள்கூட ஆய்வுகளுக்காக செலவு செய்யும் பெரிய அமைப்புகளுடன் போட்டி போட முடியும். R&D மற்றும் கண்டுபிடிப்புகள் வேகமாக இருக்கும்.
முக்கியமாக, மருத்துவத்தில் நாம் சந்திக்கும் பல சவால்களை AI தீர்க்க முடியும். எப்போதுமே ஸ்பெஷலிஸ்டுகள் இல்லாத சிறிய அமெரிக்க மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளைக் கண்டறிய AI உதவலாம். Viz.ai ஒரு உதாரணம். இது பக்கவாதம் மற்றும் பிற அவசரநிலைகளைக் கண்டறிய ஸ்கேன்களைப் பகுப்பாய்வு செய்து, மருத்துவக் குழுக்கள் தங்கள் நோயாளிகளின் சிகிச்சையை ஒருங்கிணைக்க உதவுகிறது. இது அமெரிக்காவில் உள்ள சுமார் 2,000 மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விவசாயத்தில் AI-ன் தாக்கம் நேர்மறையாக உள்ளது. சிறிய நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு வானிலை அறிக்கைகள், என்ன விதையைப் பயிரிடலாம் என்ற ஆலோசனை, பயிர்களையும் கால்நடைகளையும் நோய்களில் இருந்து காப்பது, மனிதவளத்தைப் பெருக்குவது ஆகியவற்றில் துல்லியமான தரவுகள் கிடைப்பது இல்லை. மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் காலநிலை மாற்றத்தினாலும் இந்த விவசாயிகளுக்கு நிச்சயமாக பல உதவிகள் தேவைப்படுகின்றன. AI பயன்பாடு இதில் விவசாயிகளுக்கு உதவ முடியும். பணக்கார விவசாயிகளுக்குக் கிடைக்கும் அதே தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் ஏழை விவசாயிகளுக்கும் கிடைக்கும்.
அரசுக்கும் மக்களுக்குமான தொடர்பை எளிமைப்படுத்த AI உதவுகிறது. இன்சூரன்ஸ் விண்ணப்பத்தில் இருந்து மாணவர் ஊக்கத்தொகை விண்ணப்பம் வரை எல்லாவற்றையும் பெறுவதை AI எளிமையாக்க முடியும்.
மனநலத்தில் AI தாக்கம் குறித்து எனக்கு கவலைகள் இருந்தாலும், அந்தத் துறையில் அவை பெருமளவில் உதவவும் முடியும். பெரும்பாலான சமூகங்களில் ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் போதைப்பழக்க நிபுணர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். சரியான தனியுரிமைப் பாதுகாப்புகள் இருக்கும்பட்சத்தில், எச்சரிக்கை அறிகுறிகளை மக்கள் அடையாளம் காண செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உதவக்கூடும்.
இதேபோல கல்வித்துறையிலும் AI நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களை ஆசிரியர்கள் தனித்தனியாகப் புரிந்துகொள்ளவும், மாணவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் இது உதவுகிறது.
மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக வாழவும், தொழில்முனைவோர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் செயலாற்றவும் AI வழிவகை செய்கிறது.
முக்கியமாக, இப்போது ஆவணப் பணிகள், அதிகாரத்துவ நடைமுறைகள், நம்பகமான தகவல்களைத் தேடுதல் போன்றவற்றில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்த AI உதவலாம். இது சிறியதாகத் தோன்றினாலும், இந்தப் பலன்களை எல்லாத் தரப்பினருக்கும் பெருக்கும் போது கணிசமான மாற்றத்தை விளைவிக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அனைத்து வருமானப் பிரிவில் உள்ள மக்களுக்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த AI உதவ முடியும். ஆனால் அது தானாக நடக்காது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் பலன்கள் மிகச் சிறிய பணக்காரக் குழுவினருக்கு மட்டுமல்லாமல், எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்பதை நாம்தான் உறுதி செய்ய வேண்டும். இதில் அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் வலுவான பங்காற்றினால் மட்டுமே, குறைந்த வருமானம் உள்ள குடிமக்களும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளும் இதனால் பலனடையும்.
மனித சிந்தனைகளை எந்திரங்கள் முந்திச்செல்லும் காலத்தில், மனிதத்தை நாம் எப்படி பாதுகாக்கப்போகிறோம் என்பதுதான் கேள்வி.
ஜனநாயக நாட்டில் AI உருவாக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை சீர்குலையும் இந்த மாற்றத்தை அவர்கள் சமாளிக்க உதவுவதற்கு, வலுவானதும் நெகிழ்வானதுமான ஒரு சமூகப் பாதுகாப்பு வலை நமக்குத் தேவைப்படும்.
செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் மற்றும் நீர் குறித்து உள்ளூர் சமூகங்கள் ஏற்கனவே கவலைகளை எழுப்பி வருகின்றன. தீர்வுகள் இல்லாத பட்சத்தில், சில குழுக்கள் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் அதன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த அழுத்தம் கொடுக்கும்.
AI விளைவிக்கும் தீங்குகளை விட அதன் பலன்கள் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கான எனது ஐடியாக்களை அடுத்தடுத்த மாதங்களில் எழுதுகிறேன். இப்போது அடிப்படையான 3 விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
செயற்கை நுண்ணறிவைக் கையாள்வதற்கான ஒரு உள்நாட்டு மற்றும் சர்வதேச கட்டமைப்பை உருவாக்குவதுதான் உச்சகட்ட முன்னுரிமை கொண்ட பணி.
இவ்வளவு வேகமாகப் பரவும், நம் வாழ்க்கையில் பல்வேறு அங்கங்களில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பத்தை நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைப்புகளால் கையாள முடியாது. எனவே, புதிய ஒன்றை உருவாக்குவது அவசியம்.
இது எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு முயற்சி என்பதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அரசாங்கம் தேசியப் பாதுகாப்பு என்ற ஒரே ஒரு செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தனது மிகப்பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டது.
AI அதைவிட பலமடங்கு திருத்தத்தைக் கோருகிறது. ஏனென்றால், இது தேசியப் பாதுகாப்பு மட்டுமின்றி, வேலைவாய்ப்பு, கல்வி, வரிவிதிப்பு, எரிசக்தி, தேர்தல்கள், காற்று மற்றும் நீர், பொது சுகாதாரம், நிதி அமைப்பு, சட்ட அமலாக்கம், போக்குவரத்து, பொது நிலங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளையும் பாதிக்கும்.
தற்போதைய அதிகாரத்துவம் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து வரும் இந்தத் தாக்கங்களை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படவில்லை.
தொழிலாளர் துறைக்கு பணியாளர் சீர்குலைவு புரியலாம், ஆனால் பாதுகாப்பு அபாயம் புரியாமல் போகலாம். ஒரு வணிக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சந்தை ஒருமுகப்படுத்தல் புரியலாம், ஆனால் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் மீது செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் புரியாமல் போகலாம். நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்படும்போது, அவை அமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே காணும், ஆனால் செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் முழு அமைப்பிலும் அலைபோலப் பரவும்.
ஒவ்வொரு நாட்டிலும் AI-ஆல் ஏற்படும் பாதிப்புகளுக்குப் பொறுப்பேற்கும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு இணையாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இப்போது உலகில் இருக்கும் அமைப்புகளால் இந்தப் புதிய கட்டமைப்பை வடிவமைத்து செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. அரசுகள் மிக மெதுவாக இயங்குகின்றன, நாடுகள் பிளவுபட்டு இருப்பது சிறிய ஒத்துழைப்பைக்கூட கடினமானதாக மாற்றிவிடுகிறது. அமெரிக்காவும் சீனாவும் ஒன்றாக ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் இப்போது மெதுவாக நகர முடியாது. AI-ன் சீர்குலைவுகளால் அரசுகள் நெருக்கடிக்கு உள்ளாவதற்கு முன்னரே நாம் சரியான அமைப்புகளை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள அமைப்புகள் எங்கு தோல்வியடைகின்றன என்பதையும், என்ன புதிய அதிகார அமைப்புகள் தேவைப்படலாம் என்பதையும் கண்டறிவதற்காக, தேசியத் தலைவர்கள் பொருளாதார நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர் நல வல்லுநர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களைக் கூட்ட வேண்டும். ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களைக் கொண்டுள்ள மற்றும் விநியோகச் சங்கிலியின் முக்கியப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் நாடுகள், பொதுவான நெறிமுறைகளை அமைப்பதற்காக இப்போதே சந்திப்புகளைத் தொடங்க வேண்டும். உடனடியாகத் தொடங்கவில்லை என்றால், வணிகப் போட்டி மற்றும் சந்தை அழுத்தம் நிறுவனங்களின் ஒத்துழைப்பைக் கடினமாக்கிவிடும்.
நான் சொல்லும் கட்டமைப்பை உருவாக்க சில ஆண்டுகள் ஆகலாம். அதனால்தான் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்கிறேன்.
என அப்பா 2020 ம் ஆண்டு அல்சைமரால் இறந்தார். அவருடைய கடைசி காலத்தில் பரமரிப்பாளர்கள்தான் அவரை இரவும் பகலும் கவனித்துக்கொண்டனர். அவர்கள் அவர் சொல்லாமலே அவரது தேவைகளை புரிந்துகொண்டனர்.
நானும் என குடும்பமும் அவர்களுக்கு எப்போதும் நன்றியோடு இருக்கிறோம். அவர்கள் என தந்தைக்கு அளித்த கவனிப்பை எந்த ரோபோட்டாலும் செய்ய முடியாது.
எந்த வேலைகள் இல்லாமல் போகும், எவை நிலைத்திருக்கும் என்ற கேள்வி எழும்போதெல்லாம், நான் அந்தக் பராமரிப்பாளர் குழுவைப் பற்றி நினைக்கிறேன். செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மேம்பட மேம்பட, சில குறிப்பிட்ட பணிகளை மனிதர்கள் மட்டுமே செய்வதற்காக நாம் ஒதுக்கி வைப்போம் என்று நான் நம்புகிறேன். இந்தத் துறையை நான் 'மனிதர்களுக்கானது' (Human Reserved) என்று அழைக்கத் தொடங்கியுள்ளேன்; இது நாம் பரிசீலிக்க வேண்டிய ஐடியாக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
நாம் சாலைகள் போட்டு கட்டடங்கள் எழுப்பக் கூடிய சில இடங்களை இயற்கைகக்காக விட்டு வைத்திருக்கிறோம். ஏனென்றால் அவற்றை அழித்தால் அதனால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதை நாம் உணருவோம். அதெப்போல தான் Human Reserved என்பதும்.
பொருளாதாரக் காரணங்களுக்காக, நாம் ஒரு துறையை 'மனிதர்களுக்கான ஒதுக்கீடு' என ஒதுக்கி வைக்கலாம். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பணியை இயந்திரங்கள் ஏற்க அனுமதிப்பது, எளிதில் வேலை மாற முடியாத ஏராளமான மக்களை இடம்பெயரச் செய்யும் என்பதால் நாம் அவ்வாறு செய்யலாம். தன் வாழ்நாள் முழுவதும் கட்டுமானத் துறையில் பணியாற்றிய 55 வயது நபரிடம், அவர் ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி, அது அவருக்கு மனநிறைவைத் தரும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
சுகாதாரத் துறையில், உங்களுக்குக் குணப்படுத்த முடியாத நோய் இருக்கிறது என்ற மோசமான செய்தியை ஒரு ரோபோ சொல்வதாகக் கற்பனை செய்து பாருங்கள். அது அப்படிச் சொல்ல கூடாது என்பதற்கு எந்தத் தொழில்நுட்பக் காரணமும் இல்லை. ஆனாலும், அது அப்படிச் சொல்லக் கூடாது. இந்த இடத்தில் மனிதர்களுக்கான ஒதுக்கீடு அவசியமாகிறது.
கல்வி மற்றும் மனநலப் பராமரிப்பு ஆகிய துறைகளில் பொறுப்பான ஒரு மனிதர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது செயல்பாடுகளை திறன்மிக்காதாக ஆக்குவார். இப்படி சில இடங்களில் கலவையான செயல்பாடுகளை உருவாக்கலாம். இந்த வரையறை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும்.
சில நாடுகள் முதியோர் பராமரிப்பில் மனிதர்கள்தான் இருக்க வேண்டும் என நினைக்கலாம். ஆனால் அதிகமான முதியோர் தொகையும் பராமரிப்புக்கு வேண்டியதை விட குறைவான இளைஞர் தொகையும் கொண்ட ஜப்பான் போன்ற நாடுகள் முதியோர் பராமரிப்பில் ரோபோட்களை செயல்படுத்தலாம்.
ஆனால் இந்த Human Reserved முறை எழுப்பும் அடிப்படையான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. மனிதர்களுக்காக எதை ஒதுக்குவது என்பதை யார் தீர்மானிப்பது? நாம் என்ன அளவுகோல்களைப் பயன்படுத்த வேண்டும்? நிறுவனங்கள் ஏமாற்றுவதையும், ரோபோக்களைப் பயன்படுத்துவதையும் எப்படித் தடுப்பது? ஒரு நாடு ரோபோக்களைக் கொண்டு ஒரு பொருளைத் தயாரிக்க அனுமதித்து, மற்றொரு நாடு அனுமதிக்காதபோது சர்வதேச வர்த்தகத்திற்கு என்ன நடக்கும்? இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தேட பொதுமக்களும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டத்தில் இணைய வேண்டும்!
AI-ன் விளைவால் பணியாளர்கள் வேறு வேலைக்குப் பயிற்சி பெற்று பணியில் இணையும்வரை, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வலையால் ஆதரவு தேவைப்படும். ஆனால் அவர்கள் குறைவாகப் பணியாற்றுவார்கள். அதனால் குறைவான வருமான வரி செலுத்துவார்கள். இதனால் அரசுக்கு வருமானம் குறையும். ஆனால் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் யாராவது ஒருவர் பட்ஜெட்டில் இருந்து பங்களிக்க வேண்டும்.
நாம் AI டோக்கன்கள் மற்றும் ரோபோட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என நம்புகிறேன். நீங்கள் ஒரு முதலாளியாக இருந்து ஒருவரை வேலைக்கு சேர்த்தால், ஊதிய வரி செலுத்துவீர்கள். ஆனால் ஒரு ரோபோட்டை வாங்குவதை வணிகச் செலவில் சேர்த்துவிடுவீர்கள். வரி அமைப்பு, மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டுவர உங்களைத் தூண்டுகிறது.
இந்த வரிவிதிப்பானது, மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் வேகத்தைக் குறைப்பதோடு, மறுபயிற்சி மற்றும் வலுவான பாதுகாப்பு வலைப்பின்னலுக்காக நிதியையும் திரட்டும். அதேவேளையில், மருத்துவம் மற்றும் கல்வியை மலிவாக்கும் AI-ன் நன்மைகள் கிடைப்பது தாமதமாகாத வகையில் இது முறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த யோசனையை மறுப்பவர்கள், இது பொருளாதார ரீதியாக உகந்ததாக இல்லை என்கிறார்கள். ஆனால் அவர்கள் தனிநபர் மற்றும் சமூகத்தில் ஒரு வேலையின் பரந்த மதிப்பைக் கருத்தில் கொள்வதில்லை. மக்களை அவர்களது வேலையில் பாதுகாக்க நாம் குறைந்த செயல்திறனுடன் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னரே ரோபோட் வரியை முன்மொழிந்தேன். அப்போது இது விசித்திரமான சிந்தனை என்றனர். நான் இப்போதும் அந்த யோசனையின் தீவிர ஆதரவாளனாக இருக்கிறேன். செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தலுக்கு இது முழுமையான தீர்வு இல்லை என்றாலும், இது ஒரு விவேகமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
எப்படியானாலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களால் வேலை இழக்கும் தொழிலாளர்கள், வேலை நேரம் அல்லது ஊதியம் குறையும் மக்கள், மற்றும் இழப்புகள் அதிகமாக உள்ள சமூகங்கள் உட்பட, மிகவும் தேவைப்படும் மக்களுக்கு உதவ நாம் நிதி திரட்டியாக வேண்டும். தேவை தீவிரமடையும்போது அமைப்புகள் தயாராக இருப்பதற்காக, நாம் அந்தப் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும்.