தூத்துக்குடியில் ஒரு சிறிய கிராமமான கட்டுநாயக்கன்பட்டியில் சட்டையுடனும், லுங்கியுடனும் மக்களால் 'முத்து மாஸ்டர்' மற்றும் 'அண்ணாச்சி' என்று அழைக்கப்படும் நபர் உண்மையில் ஆண் இல்லை. அவர்தான் பேச்சியம்மாள். ஆம்! பெண்ணாக பிறந்து திருமணமாகி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்து ஆணாக மாறியவர்தான் பேச்சியம்மாள். இவர் ஆணாக மாற என்ன காரணமாக இருக்கும்? விரிவாக காணலாம்.
சமுதாயத்தில் உள்ள கட்டமைப்புகளை தகர்த்தெறிந்து ஆணாக மாறி, தன் மகளை திருமணம் செய்து கொடுத்த முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் இந்த நிலையை தேர்ந்தெடுக்க சமுதாயத்தின் இருண்ட பக்கங்களும் காரணம். பேச்சியம்மாவுக்கு 20 வயதிலேயே வீட்டில் திருமணம் செய்துவைத்துள்ளனர். ஆனால், 15 நாட்களிலேயே அவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். துக்கம், சோகம் என எல்லாம் சூழ்ந்திருந்த நேரம் அவர் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்த பின், குழந்தையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்றும், மீண்டும் ஒரு திருமண வாழ்க்கைக்கு சொல்லப்போவதில்லை எனவும் தீர்க்கமான முடிவெடுத்தார். குழந்தையை வளர்க்கவேண்டி அவர் வேலைக்கு செல்லும் வழியில் ஆண்களால் பல இன்னல்களுக்கு ஆளானார். பாலியல் ரீதியாக பல துன்பங்களுக்கு ஆளான பின்பு பேச்சியம்மாள் ஒரு முக்கிய முடிவு நோக்கி தள்ளப்பட்டார்.
அதுதான், ஆணாக மாறுவது. அவர் முத்துவாக மாறினார். சட்டை அணிந்துகொண்டு, வெட்டி ஒன்றினை கட்டிக்கொண்டு, ஆண்களைப்போல் முடியை வெட்டிக்கொண்டு முத்துவாக மாறினார். ஆண்களின் ஆதிக்கம் இருந்த அனைத்து துறைகளிலும் முத்துவின் கால்கள் பதிந்தன. தனது ஒற்றை மகளை வளர்க்க முத்து (எ) பேச்சியம்மாள் டீ கடை, கட்டிட வேலை, ஹோட்டல் வேலைகள் என முத்து (எ) பேச்சியம்மாள் செய்யாத வேலை இல்லவே இல்லை என்று கூறலாம். இந்த 'முத்து மாஸ்டர்' என்ற பெயர் தூத்துக்குடியில் ஒரு உணவகத்தில் பணிபுரிந்தபோதுதான் அவருக்கு வந்தது. வாடிக்கையாளர்களும் சக ஊழியர்களும் அவரை 'முத்து மாஸ்டர்' என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெயரும் அவருக்கு அப்படியே நிலைத்துவிட்டது.
ஊரிலும் கூட 'முத்து மாஸ்டர்' என்றால் கடின உழைப்பாளி, நம்பகமான ஆள் என்ற நற்பெயரையே பெற்றிருந்தார். இந்த ஆண் என்ற அடையாளம் குறித்து பலரும் பேச்சியம்மாளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து அவரது விளக்கமானது, "ஆண் என்ற அடையாளம் என்பது, தன்னையும்-தான் மகளையும் பாதுகாப்பதற்காகவே" என்று அவர் கூறியுள்ளார். வேலை சார்ந்த சவால்களை தவிர்த்து தோற்றத்தில் மட்டும்தான் ஆணாக மாற்றமுடியுமே தவிர உடலால் அல்ல. அதனால் அவர் 'மாதவிடாய்' போன்ற விஷயங்களில் சிரமத்தை சந்தித்துள்ளார். இதுமட்டுமின்றி தனது மகள் சண்முகசுந்தரிக்கு கூட 'தான் யார்?' என்பதை அவரது 7 வயது வரை கூறாமலே இருந்துள்ளார். அதன் பின்னர்தான் உண்மையை உடைத்துள்ளார். இந்த ஆண் என்னும் அடையாள போர்வைக்குள் மறைந்திருக்கும் முத்து (எ) பேச்சியம்மாள், ஆண் என்ற அடையாளத்தை மட்டுமின்றி அதோடு கூட பீடியையும் புகைக்கத் தொடங்கினார். இதுவும் அவரை பல நேரங்களில் கைப்பற்றியுள்ளது. 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி நிறுவனத்திடம், ஒருமுறை இரவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது குடித்துவிட்டு ஒருவர் வந்துள்ளார். அப்போது முத்து தனது பீடியை பற்றவைத்துள்ளார். அவ்வழியே வந்த குடிகாரரும் அவரை ஆண் என நினைத்து நெருப்பு வாங்கி சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.
தற்போது தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்து, பொருளாதார ரீதியாகவும் ஒரு நல்ல நிலைக்கு முத்து (எ) பேச்சியம்மாள் வந்திருந்தாலும் இன்று வரை ஆண் என்ற தனது அடையாளத்தை அவர் மாற்றவில்லை, மாற்றவும் விரும்பவில்லை. இதனை ஒரு பாலினம் சார்ந்த ஒரு போர்வை, மாறுவேடம் என்று எண்ணுவது ஒரு தரப்பில் இருந்தாலும், மற்றொரு தரப்பில் ஒரு பெண் தனியாக வாழ்வது எவ்வளவு பெரிய சவாலான காரியம் என்பதை உணர்வு பூர்வமாக உணர்த்துகிறது எனலாம். தனியாக வாழும் ஒரு பெண் சந்திக்கும் பாலியல் சார்ந்த தொல்லைகளில் இருந்து தப்பித்து ஒரு சாதாரண வாழ்வை வாழ்வது என்பது பெண்ணாக எவ்வளவு கடினம் என்பது 'முத்து மாஸ்டர்' என்கிற பேச்சியம்மாள் வாழ்கை மூலம் உணர்ந்துகொள்ளமுடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்