இளநிலை மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் நேற்று மாலை நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு இந்தியா முழுக்க MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான ஒருங்கமைந்த தேர்வாகும்.
இந்தியா முழுக்க 5,453 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். கடுமையான சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னரே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர்.
மேலும் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் தேர்வெழுதும் அறைக்குள் வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இயற்பியல் தேர்வுகள் மிகவும் கடினம்!
கடந்த ஆண்டு வினாத்தாளை விட இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்ததாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இயற்பியல் பகுதி மிகவும் கடினமாக இருந்ததாகவும் 78% கேள்விகள் சிந்தித்து பதிலளிக்க கூடிய வகையில் இருந்ததால் நேரமின்மை சிக்கல் ஏற்பட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஏன் இத்துணை கெடுபிடி!
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும்போது பெரும் சலசலப்பு ஏற்படும். கடந்தாண்டு சர்ச்சையோடு கூடிய சலசலப்பு ஏற்பட்டது. கடந்த 2024 -இல் ஜார்கண்ட், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள், கருணை மதிப்பெண், முறைகேடு நடந்தது அம்பலமானது. பிஹார் மாநிலத்தை சேர்ந்த 67 -பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றனர், ஒரே மையத்தில் தேர்வெழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் வந்து குவிந்தன. 38 மனுக்களையும் ஒரே வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மறு தேர்வு நடத்த அறிவுறுத்தியது, ஆனால் மத்திய அரசு மறுத்தேர்வை நடத்த முடியாது என்று கூறியதுடன் “7 -பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாய் உறுதியும் அளித்திருந்தது.
மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கடந்த மாதம் “நீட் தேர்வு முறைகேடு” தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.
“நீங்கள் பணக்காரராக இருந்தால், இந்தியதேர்வு முகமையை வாங்கிவிடலாம் என கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றனர், எதிர்க்கட்சியும் இதையே உணருகின்றன” என கடந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடரில் “ராகுல் காந்தி” கடுமையாக சாடியிருந்தார். சொல்லப் போனால் உண்மையாக தேர்வுக்கு உழைத்த 23 லட்சம் மாணவர்களுக்கான நீதி நீர்த்து போய் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மாணவிகளின் உடையில் இருந்த பட்டன்கள் அறுப்பு!
அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் கடும் சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு முறைகேடு விவகாரத்திலிருந்து சோதனை நடைமுறைகள் இன்னும் கெடுபிடியாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக திருப்பூரில் நேற்று தேர்வெழுதவந்த மாணவியின் உடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவர் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டார். அதன் பின்னர் அருகிலிருந்த காவலர் ஒருவர் உடனடியாக ஒரு கடைக்கு சென்று மாணவிக்கு மாற்று துணி வாங்கிக்கொடுத்து தேர்வெழுத உதவி புரிந்தார்.
மேலும் மாணவர்களின் மூக்குத்தி, தோடு என அனைத்தும் சோதனையிடப்பட்டன, அதிலும் குறிப்பாக மாணவர்களின் அரைஞாண் கயிறு உட்பட கழற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு மாநிலம் முழுவதிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. “ ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடும் பாகுபாடு காட்டுவதாகவும், மேலும் வட மாநிலங்களில் நீட் தேர்வின்போது நடந்த முறைகேடுகளை ஒழுங்காக விசாரிக்காமல், நன் முறையில் தேர்வெழுதும் தமிழக மாணவர்களை பெரிதும் துன்பப்படுத்துவதாக, பல நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மாணவி மரணம்!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்கள் தொடர்ந்து வருகிறது. அதற்கு காரணம் தொடரும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட முதல் மாணவி அனிதா தொடங்கி பல மாணவர்கள் இதற்கு பலியாகியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கயல்விழி (17) என்ற மாணவி தாம்பரம் நீட் தேர்வு மையத்தில் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆண்டுதோறும் நீட் தேர்வால் பலியாகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்த மாணவர்கள் எல்லாம் தகுதியின்மையால் தோல்வியடையவில்லை. பொதுத்தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வை இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக மாநில பாடத்திட்ட முறையில் படித்த மாணவன் திடீரென தனக்கு சம்பந்தமில்லாத ஒரு தேர்வுமுறையை அணுக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அவனால் என்ன செய்ய முடியும்.
தற்போதுள்ள நீட் பயிற்சி மையங்கள் அனைவருக்குமான ஒன்றாக இல்லை. ஏழை, எளிய பட்டியிலான மக்களால் அவ்வளவு லட்சம் பணம் கொடுத்து கோச்சிங் சென்டர் எவ்வாறு போக முடியும் என்ற கிளவியும் எழுந்துள்ளது?
இளைஞர்கள் நாடு என்று அறியப்படும் இந்தியாவில்தான் கல்வியின் பெயரால் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்