ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழா தற்போது, தமிழகத்தில் களைகட்டி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் என 5 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயகத் திருவிழா எனப்படும் தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டியது அவசியமா? என்று கேட்டால் அது அவசியம் மட்டுமல்ல, நம் ஒவ்வாருவரின் உரிமையும் கூட .
நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது, நம்மை யார் ஆளவேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் முறைதான் ஜனநாயகம். இதனால்தான் தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்று அழைக்கிறோம். ஓர் அந்நியனுக்கு அடிமையாக இருப்பதைவிட, நாம் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காகப் பெறப்பட்டதே சுதந்திரம். இந்த சுதந்திரம் நமக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. இதற்கு ஏராளமான உயிர் தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. ரத்தம் சிந்தியும், உயிர் தியாகங்கள் செய்தும் இந்த உரிமையை பெற்றுள்ளோம். அப்பேற்பட்ட உரிமையை நாம் பயன்படுத்தாமல் போனால், அது சுதந்திரத்தை அவமதிப்பதாகும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற அங்கீகாரத்தைப் பெற்று, செழுமைமிக்க தனது பயணத்தைத் தொடங்கி 72 ஆண்டுகளைக் கடந்த போதிலும், முழுமையான நூறு சதவீதம் வாக்குகள் பதிவாவதில்லை என்பது இந்திய குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டிய விஷயம். இந்த நாட்டை அடுத்த 5 ஆண்டுகள் யார் ஆள வேண்டும்? என்று தீர்மானிக்கும் உரிமை நம்மிடம்தான் உள்ளது. அதுவே நமது வாக்குரிமை.
இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடிய வலிமை உள்ள முதலாளிகள் நாம்தான் என்பதில் நமக்கு பெருமை இல்லையா...? ஜனநாயகத்துக்கான சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதிலும், வாக்குகளின் சதவீதத்தை அதிகப்படுத்தி வலிமை பெறுவதிலும்தான், இந்திய ஜனநாயகத்தின் மாண்பு நிறைந்துள்ளது.
இந்த வாக்குரிமை என்பது மட்டும்தான் ஜாதி, மதம், இனம், படித்தவர், படிக்காதவர், வசதி படைத்தவர், ஏழை, ஆண், பெண் என்ற பாலினம் போன்ற, எந்த பாகுபாடும் இன்றி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சமமாக உள்ளது. இந்த வாக்களிப்பதில்தான் உண்மையான சமூக நீதி அடங்கியுள்ளது என்றால் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இன்றையத் தலைமுறையினருக்கு இந்த வாக்களிக்கும் நாள் என்பதை ஒரு பொது விடுமுறை கிடைக்கும் நாள் அவ்வளவுதான். அந்த நாளில் நன்றாக தூங்கலாம், வெளியில் சுற்றலாம் என்ற மன நிலைதான் உள்ளது.
வேறு சிலருக்கு, நான் சுயமாக உழைக்கிறேன், சுயமாகச் சம்பாதிக்கிறேன், சுயமாக என் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டேன், அப்படி இருக்கையில், அரசின் உதவி எனக்கு எப்போதும் தேவையில்லை. அப்படி இருக்க நான் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை. இளம் தலைமுறையினரோ, தங்களது மீம்ஸ்களின் மூலம் மட்டுமே தங்களின் நிலைபாட்டை எடுத்துரைத்து, புதிய ஜனநாயக பாதையை அமைத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க தவறி விடுகின்றனர்.
வாக்களிப்பது அவசியமா...?
நாம் உபயோகப்படுத்தும் சட்டையில் இருந்து, சாப்ட்வேர் பொருள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. எனவே அரசாங்கத்தை தீர்மானிக்கக் கூடிய இடத்தில் நாமும் இருக்க வேண்டும் என்பதே, வாக்களிப்பதற்கான அவசியமாகிறது. வாக்களிப்பதன் மூலம் நாம் இந்திய குடிமகன் என்ற நிலையை அடைகிறோம்...
இந்த அடையாளம் நமக்கு பெருமை இல்லையா...? ஒருவேளை நாம் இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் நாம் யார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் நிலைதான் ஏற்படும். மன்னர் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ மன்னர், மன்னரின் மகன் அடுத்த மன்னர், அவரது மகன் அதற்கடுத்த மன்னர். இப்படி பட்டியல் நீண்டுகொண்டேதான் போகும்.
சாமானியர்கள் மன்னராக முடியுமா...? ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், முதலமைச்சராகவோ, பிரதமராகவோ வர முடியும். அதுவும் நாம் விரும்பிய நபரை, நாமே தேர்ந்தெடுக்கலாம். அதுதான் இந்த ஜனநாயகத்தின் சிறப்பு. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா இன்னமும் ஜனநாயக நாடாக இருப்பதற்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம்.
அரசியல் ஒரு சாக்கடை, நான் இதில் வரமாட்டேன், ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன...? என்று பலர் பேசுவதை கேட்டிருக்கிறோம். ஒரு திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைவதற்கு நாமும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தோம் என்பது சமகாலத்தில், நீண்ட ஜனநாயகத்தேரை இழுத்துச் செல்வதில், நமக்கும் ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதை உணரச் செய்யும் வெளிப்பாடுதான் வாக்களிப்பதாகும்.
முன்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாதிருந்தது. இதற்காக பெண்கள் போராடி, பல உயிர்களை தியாகம் செய்து, இந்த வாக்குரிமையை பெற்றுள்ளனர். இப்படி போராடி கிடைத்த உரிமையை விட்டுக்கொடுக்கலாமா? ஒரு சிலர் வாக்களிக்காமல் இருப்பதை பெருமையாக கருதும் நிலையில் மற்றொரு தரப்பினர், நாங்கள் தெளிவான முடிவை எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, வாக்குப் பதிவில் நோட்டாவை தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம் எதுவும் மாறப்போவதில்லை. இதன் மூலம் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
அதை விடுத்து, உங்கள் பகுதியில் மக்களுக்கு சேவை செய்பவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து, உங்கள் அங்கீகாரத்தை அளித்து, அவர்களின் திறமையையும், சேவையையும் ஊக்கப்படுத்துங்கள். இன்று ஓட்டுக் கேட்பவர்கள் யாரும் , நாளை பதவிக்கு வந்தபின், தொகுதி மக்களை கண்டு கொள்வதில்லை. இதனால் நான் வாக்களிக்க மாட்டேன் என்று கூறுவதும் தவறுதான். யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை யாரிடம் போய் முறையிட முடியும். மக்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்தால்தானே அவர்களிடம் முறையிட முடியும்.
வாக்களிப்பது மட்டும் நமது கடமை அல்ல.
நாம் வாக்களித்து பதவிக்கு வந்தவர்கள் தங்கள் சேவையை சரியாக செய்யவில்லை என்றால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையும் நமக்கு உண்டு. இந்த உரிமை வேண்டும் என்றால், வாக்களிக்கும் கடமையை நாம் முறையாக செயல்படுத்த வேண்டும். தேர்தல் நேரங்களில் வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் ஆட்சியாளர்களைக் குறை கூறுவது எந்த வகையில் நியாயம்? ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டும் கண்ணாடிதான் வாக்குப்பதிவு
இப்படிப்பட்ட வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். ஆயிரம் ரூபாய்க்கு வாக்கை விற்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை நாம் அடமானம் வைக்கிறோம் என்று அர்த்தம். எனவே சிந்தித்து, அனைவரும் கட்டாயமாக வாக்களியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
முக்கியமாக பெண்கள் கட்டாயமாக வாக்களியுங்கள். ஏனென்றால் பெண்களுக்கான வாக்குரிமை போராடி பெறப்பட்டது. எனவே அதனை வீணடிக்க வேண்டாம்...
நூறு சதவீதம் வாக்களிப்பை பெற்றால் மட்டுமே இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடாக மாற முடியும்.
வாக்களிப்போம்.... ஜனநாயகத்தை காப்போம்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.