சிறப்பு செய்திகள்

உதயநிதி: 9 பிரிவுகளில் வழக்கு; தவெகவின் தீவிரம் நீதிமன்றத்தில் எடுபடுமா?

இது அரசின் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும் கடிவாளம் போடும் முயற்சியாகக் கருதப்படுவதால், உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

மாலை முரசு செய்தி குழு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி கைதின் பின்னணி

நேற்று (ஆகஸ்ட் 3) தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் உரிமைப் போராட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆபாசமாகப் பேசியதாக அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது, கீழே இருந்த தொண்டர் ஒருவர் குறிப்பிட்ட நடிகையின் பெயரைக் கூறியதைத் தொடர்ந்து, அதனை முதலமைச்சருடன் இணைத்து நக்கலான தொனியில் அவர் பேசியதாகவும், அது ஆபாசமாகப் பொருள்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நேற்று மாலை தஞ்சையில் த.வெ.க. மகளிரணி நிர்வாகி பைரவி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று காலை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், திமுக தொண்டர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். பின்னர், விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உதயநிதி கைதைக் கண்டித்து வழியெங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

FIR சொல்வது என்ன?

இது அரசின் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும் கடிவாளம் போடும் முயற்சியாகக் கருதப்படுவதால், உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

உதயநிதிக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையின்படி, அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 196: சமூகத்தில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையையோ, வெறுப்பையோ அல்லது விரோதத்தையோ தூண்டுவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

  2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 192: கலவரத்தைத் தூண்டும் நோக்கில் வேண்டுமென்றே செய்யப்படும் தூண்டுதல்கள் அல்லது வெறுப்பூட்டும் நடவடிக்கைகளைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

  3. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 352: அமைதியைக் குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஒருவரை அவமதிப்பது அல்லது அவமானப்படுத்துவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

  4. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 79: ஒரு பெண்ணின் கற்பை அல்லது கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள், சைகைகள் அல்லது சொற்களைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

  1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 296(b): பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுவது அல்லது பாடுவது போன்ற செயல்களைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

  2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 61: குற்றவியல் சதித்திட்டம் (Criminal Conspiracy) தொடர்பான சட்டப்பிரிவு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து, ஒரு சட்டவிரோதச் செயலைச் செய்யத் திட்டமிடுதல் அல்லது அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.

  3. பாரதிய நியாய சன்ஹிதா, 2023 - பிரிவு 351(2): ஒருவரது உடல், சொத்து அல்லது நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துவது அல்லது அவர் சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டிய செயலைச் செய்ய விடாமல் தடுப்பதற்காகவோ, செய்யக்கூடாத செயலைச் செய்ய வைப்பதற்காகவோ பயமுறுத்துவது குற்றவியல் அச்சுறுத்தலாகும்.

  1. தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு (திருத்த) சட்டம், 2002 - பிரிவு 4: எந்தவொரு இடத்திலும் (பொது இடம் அல்லது தனிப்பட்ட இடம்) பெண்களைத் துன்புறுத்தும் அல்லது அவர்களுக்கு அசௌகரியம், மன உளைச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது இச்சட்டத்தின்படி குற்றமாகும்.

  2. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) - பிரிவு 67: மின்னணு வடிவத்தில் (Electronic Form) ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களை வெளியிடுவது மற்றும் பரப்புவதைத் தடுக்கும் சட்டப்பிரிவு.

முன்னதாக, முதலமைச்சருக்கு எதிராகப் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் என்ன நடக்கலாம்?

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த பிறகு, திமுகவினருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுவது தொடர்கதையாக உள்ளது. முன்னதாக, முதலமைச்சருக்கு எதிராகப் பேசியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். குதிரைப்பேர வழக்கு, ஊழல் வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகளையும் அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

யாராக இருந்தாலும், ஆபாசமான பேச்சுகள், அவதூறுகள், மிரட்டல்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால், ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துகளுக்காக வீடுபுகுந்து கைது செய்யப்படுவது பாசிச நடவடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது.

இது அரசின் மீதான நியாயமான விமர்சனங்களுக்கும் கடிவாளம் போடும் முயற்சியாகக் கருதப்படுவதால், உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரிவுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

உதயநிதியின் பேச்சு குற்றம்சாட்டப்பட்டது போல் ஆபாசமானதாக நீதிமன்றம் கருதினாலும், BNS பிரிவு 296(b) (பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல்), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2002 - பிரிவு 4, BNS பிரிவு 79 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்) ஆகிய பிரிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த மொத்த நிகழ்வுகளும் ஆளும் அரசுக்கு விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ளும் பக்குவமோ, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தரும் பொறுமையோ இல்லை என்பதையே காட்டுகின்றன.

BNS பிரிவு 196, BNS பிரிவு 192, BNS பிரிவு 61, BNS பிரிவு 351(2), தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) - பிரிவு 67, BNS பிரிவு 352 ஆகிய பிரிவுகள் வழக்கை பூதாகரப்படுத்துவதாகவே பார்க்கப்படலாம்.

BNS பிரிவு 196 சட்டப்பிரிவு மதம், இனம், சாதி, மொழி அல்லது இருப்பிடம் சார்ந்த இரு சமூக/குழுக்களுக்கிடையே விரோதத்தை தூண்டுவதற்கே பயன்படுத்தப்படும். ஒரு தனிநபரையோ அல்லது நடிகரையோ பற்றிய பேச்சிற்கு சமூகக் குழுக்களிடையே பகைமை தூண்டப்பட்டதாகக் கூறுவது பொருத்தமற்றது.

BNS பிரிவு 352 உதயநிதி ஸ்டாலினின் கிண்டல் பேச்சு பொதுவெளியில் அமைதியைக் குலைப்பதற்காக திட்டமிட்டு பேசப்பட்டதாக நிரூபிப்பது கடினம்.

BNS பிரிவு 192 வன்முறையையோ அல்லது கலவரத்தையோ நேரடியாகத் தூண்டும் நோக்கில் பேசுவதற்கே இப்பிரிவு பொருந்தும். நக்கலாகவோ அல்லது இரட்டை அர்த்தத்திலோ பேசப்பட்ட பேச்சு நேரடியாகக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறுவது சட்டப்படி நிரூபிப்பது கடினம்.

BNS பிரிவு 61 இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் இணைந்து திட்டமிட்டு ஒரு சட்டவிரோதக் குற்றத்தைச் செய்ய முன்கூட்டியே சதி செய்வதே Criminal Conspiracy ஆகும். மேடையில் தொண்டர் ஒருவர் கேட்ட கேள்விக்குத் தன்னிச்சையாகப் பதிலளித்துப் பேசியதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்று கூறுவது பொருந்தாது.

BNS பிரிவு 351(2) ஒருவரது உடலுக்கோ, சொத்துக்கோ அல்லது உயிருக்கோ தீங்கிழைப்பதாக நேரடியாகப் பயமுறுத்துவது அல்லது அச்சுறுத்துவதே குற்றவியல் அச்சுறுத்தலாகும். இச்சம்பவத்தில் அவ்வாறான நேரடி மிரட்டல்கள் ஏதும் விடுக்கப்பட்டாதாக தெரியவில்லை.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) - பிரிவு 67 இணையதளம், வீடியோக்கள் அல்லது டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் ஆபாசப் பொருட்களை/காட்சிகளைத் திட்டமிட்டு வெளியிடுவதற்கான பிரிவு. நேரில் நடந்த பொதுக்கூட்டப் பேச்சுக்கு இப்பிரிவைச் சேர்ப்பது சட்ட ரீதியாக பலவீனமானது (அப் பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவினாலும், அதை உதயநிதியே பரப்பியதாகக் கருத முடியாது).

ஒரு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான வழக்கின் தீவிரத்தைக் கூட்டுவதற்காக த.வெ.க. அரசு thevதேவையற்ற பிரிவுகளில் வழக்கு தொடுப்பது, அரசின் மீதான நன்மதிப்புக்கே களங்கம் விளைவிக்கும்.

உதயநிதி பேசிய பேச்சு கண்டிக்கத்தக்கது என்பதே பலரது கருத்து. ஆனால், மறுநாள் காலையிலேயே அவரது வீட்டில் கைது செய்திருப்பது, அவர் பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்கான முயற்சியோ என்ற ஐயப்பாட்டுக்கு வழிவகுத்துவிட்டது. நீதிமன்றத் தலையீட்டால் இன்று இரவே அவர் விடுதலை செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்த மொத்த நிகழ்வுகளும் ஆளும் அரசுக்கு விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர்கொள்ளும் பக்குவமோ, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தரும் பொறுமையோ இல்லை என்பதையே காட்டுகின்றன.