விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராகு-கேது பெயர்ச்சி, இதுவரை இருந்து வந்த சில தடைகள் மற்றும் மனக்குழப்பங்களைக் குறைத்து முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தொழில், வேலைவாய்ப்பு, வருமானம், குடும்பம் ஆகியவற்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
2026 நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இந்தப் பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த ராகு மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கும், பத்தாம் இடத்தில் இருந்த கேது ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். இதனால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வமும் உருவாகலாம்.
விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த காரியங்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த வேலை மற்றும் தொழில் தொடர்பான நெருக்கடிகள் குறையலாம். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த முயற்சிகள் நிறைவேறுவதுடன், இழந்த பொருட்கள் அல்லது சொத்துகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழலும் உருவாகலாம்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதையும், பிறருக்காக ஜாமீன் கையெழுத்திடுவதையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவினாலும், முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல் இருப்பது அவசியம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளுவைச் சமாளிக்க முடியும். தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபடலாம். வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கலாம். இருப்பினும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பதுடன், தேவையற்ற கடன் பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து, தேர்வுகளில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கலாம். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு இருந்த தடைகள் விலகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பொருளாதார முன்னேற்றத்திற்கான சூழலும் உருவாகலாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் காலமாக அமையலாம். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, “ஓம் தும் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் ஒன்பது முறை சொல்லலாம் என்பது ஜோதிடப் பரிகாரமாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.