2026 நவம்பர் 13ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நடைபெற்ற ராகு–கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சில சவால்களையும் புதிய வாய்ப்புகளையும் ஒருசேரக் கொண்டுவரும் காலமாக அமையலாம். இதுவரை பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் இருந்த ராகு, இனி அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டிற்கு மாறுகிறார். அதேபோல், தைரிய வீரிய ஸ்தானமான 3ஆம் வீட்டில் இருந்த கேது, தனம், குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கு மாறுகிறார். இதனால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பணம், குடும்ப உறவுகள், வேலை மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை சிலருக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கக்கூடும். இருப்பினும் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சக ஊழியர்களிடம் பேசும்போதும், அலுவலக ரகசியங்களைப் பகிரும்போதும் கவனம் தேவை. அவசரமாக வேலையை மாற்ற முடிவு செய்வதைவிட புதிய வாய்ப்பின் சாதக பாதகங்களை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.
வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். ஏற்கெனவே செய்து வரும் தொழிலை அனுபவத்தின் அடிப்படையில் மேம்படுத்துவது நல்லது. புதிய தொழில் தொடங்குவது அல்லது பெரிய அளவில் முதலீடு செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒப்பந்தங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் தாமதமானாலும் மனம் தளராமல் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் செலவாகலாம். தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. வீடு, நிலம், வாகனம் வாங்குவது தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். ஏற்கெனவே இருக்கும் சொத்துகள் மற்றும் முதலீடுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப வாழ்க்கையில் கேது இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானம் மிகவும் அவசியம். சிறிய விஷயங்களுக்குக்கூட குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பெற்றோர் மற்றும் பெரியவர்கள் கூறும் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். திருமண வயதில் இருப்பவர்கள் வரன் தொடர்பான முடிவுகளை நிதானமாக எடுக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் அதிக நேரம் செலவிடாமல் தேர்வுகளுக்குத் திட்டமிட்டுத் தயாராவது நல்லது. வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்புபவர்களுக்கு முயற்சிகளின் அடிப்படையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். பெண்கள் குடும்பம் மற்றும் வேலை இரண்டையும் சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
உடல்நலத்தைப் பொறுத்தவரை தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. வயதானவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகனப் பயணங்களிலும் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பது அவசியம்.
நட்சத்திர அடிப்படையில் பார்க்கும்போது, மிருகசீரிஷம் 3, 4ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் சில தடைகள் மற்றும் தாமதங்களைச் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் காணலாம். திருவாதிரை நட்சத்திரத்தினருக்கு வேலை மற்றும் தொழிலில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் குடும்ப உறவுகள், வருமானம் மற்றும் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கவும், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இந்தப் பெயர்ச்சிக்கான பரிகாரமாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். ராகு காலத்தில் துர்கை அம்மன் அல்லது காளி தேவிக்கு விளக்கேற்றி வழிபடலாம். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவதும் சிறப்பானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அவசர முடிவுகளைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்பட வேண்டிய காலமாகக் கணிக்கப்படுகிறது. வெளிநாட்டு வாய்ப்பு, வேலை முன்னேற்றம் போன்ற சாதகமான அம்சங்கள் இருந்தாலும் பணம், குடும்ப உறவுகள் மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.