பாரத நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ள நிலையில் அவைகளில் ஆயிரக்கணக்கான அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னணிகளும் நிறைந்து காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவசமுத்திரம் கிராமத்தில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் என்ற பெயரில் அமைந்துள்ளது.
ராமனும் லக்ஷ்மணனும், ராவணனை வெல்வதற்காக இலங்கை நோக்கி செல்லும் போது கிருஷ்ணகிரி வனத்தில் தங்கி இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஆஞ்சநேயர் காவலாக இருந்ததால் இந்த இடம் காட்டு ஆஞ்சநேயர் கோவில் என்ற பெயரோடு அழைக்கப்படுகிறது
கிருஷ்ணதேவராயர் ஆண்ட அக்காலத்தில் மலைகள் நிறைந்த இந்த வனப்பகுதியில் ஒரு பாறையின் மீது சிலையாய் காட்சியளித்த ஆஞ்சநேயர் காட்டு வழி செல்வருக்கு காவலாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த ஆஞ்சநேயரின் தெய்வீக சக்தியை உணர்ந்த பொதுமக்கள் அந்த காட்டுப்பகுதியிலேயே அவருக்கு கோவில் எழுப்பி வழிபாடுகள் செய்தனர்.
உலகில் வேறு எங்கும் காண முடியாதபடி ஒற்றைப் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அனுமன் சிலை, கோவிலின் வலது புறத்தில் அமைந்துள்ள பொன்மலையில் வீற்றிருக்கும் பெருமாளை நோக்கி வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியிலே இருந்த இந்த அனுமன் சிலைக்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவது அதிசயம் நிறைந்ததாக கருதப்படுகிறது .
கடந்த 1997 ஆம் வருடம் திருவண்ணாமலை இருந்து இக்கோவிலுக்கு வந்த ஒரு சித்தர் இத்தலத்தில் சிவனுக்குரிய நந்தியும் ஹரிக்கு உரிய அனுமனும் வீற்றிருப்பதால் இது தெய்வீகம் நிறைந்த இடமாகவும், பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் தெய்வங்களாகவும் இருப்பதாக தெரிவித்ததோடு தேங்காய் கொண்டு ஆஞ்சநேயரை பூஜித்தால் சகல நன்மைகளும் கிடைப்பதாக தெரிவித்தார்.
பொதுவாகவே ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு வெற்றிலை மாலையும் வடமாலையும் அணிவித்து பக்தர்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர். ஆனால் இக்கோவிலில் சிகப்புத் துணியில் கட்டப்பட்ட தேங்காயை அனுமனின் பாதத்தில் வைத்து கோவிலை 11 முறை சுற்றி வந்து ஆலயத்தில் கட்டி விட்டு சென்றால் வேண்டுதல்கள் மூன்று மாதத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இக்கோவிலில் மற்றொரு அதிசயமாக, வெளிப்பிரகாத்தில் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ள நந்தீஸ்வரரின் சிலை காலம் காலமாய் வளர்ந்து வரும் நிலையில் இவருக்கு ஐந்து வகையான எண்ணெயைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நோய் நொடியின்றி வாழலாம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்
இங்கு வேங்கட ரமணசாமி சன்னதிக்கு பக்கவாட்டில் தண்ணீரில் மிதந்தபடி அதிசய சிறு பாறை போன்ற கல் காணப்படுகிறது. இந்த பாறை குறித்து சுவரஸ்யாமான தகவல்களும், தெய்வீக செய்திகளும் கேட்போரை ஆனந்த படுத்துவதாக அமைந்துள்ளது.
ராமாயண காலத்தில் இலங்கைக்கு பாலம் கட்ட ராமபிரான் பயன்படுத்திய மிதக்கும் கற்களில் ஒன்றுதான் இதுவென்று கூறப்படும் நிலையில், அருகே அமைந்துள்ள ராமபிரானின் பாதத்தை வணங்கினால் சகல துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது
இங்கு ஆஞ்சநேயர் சிலை கிடைத்த காலத்திலேயே அருகில் இருந்த நாகர் சிலைகளும் இக்கோவிலின் சுற்றுப்புறத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் மஞ்சள் பூசி வழிபாடு நடத்துகின்றனர்
மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவரான ஆஞ்சநேயருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வேண்டுதல்களுடன். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்
இப்படி பல அதிசயங்கள் நிறைந்திருக்கும் இக்கோவில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதோடு நோய் நொடிகளில் இருந்து காக்கும் தெய்வமாக ஆஞ்சநேயர் விளங்குவதால் அவரை வணங்கி நலம் பெறுவோம்
மாலை முரசு செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்