ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. சிவாலயங்கள்தோறும் அன்று இரவு முழுவதும் கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை காண்பதினால் தெய்வங்களின் அனுக்கிரங்களும் அறிவியல் பூர்வமான நன்மைகளும் மனிதர்களுக்கு கிடைக்கின்றன.
மகா சிவராத்திரியை பற்றியும் அந்த மகத்தான இரவில், தோன்றும் தெய்வீக சக்திகள் குறித்தும் கருட புராணம், அக்னிப் புராணம், சிவராத்திரி புராணங்கள் எடுத்துச் சொல்கின்றன. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை ஈசன் உண்ட நிகழ்வும், அடிமுடி தேடிய பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் சிவன் ஒளிப்பிழம்பாக காட்சி கொடுத்த சம்பவமும், கண்ணப்பர் ஈசனுக்காக தனது கண்ணைப்பிடுங்கி அர்பணித்ததும், இந்த மகா சிவராத்திரி என்று புராணங்கள் இந்நாளை புனிதப் படுத்துகின்றன.
இவ்வுலகம் பேரழிவு எனும் பிரளயத்தை சந்திக்கும் நேரத்தில் லோகமாதா, இரவு முழுவதும், சிவபெருமானை மனதில் நிறுத்தி, மிகக் கடுமையாகப் பூஜை செய்ததால் உலகம் மீண்டது. அந்த அற்புத திருநாளைதான் சிவராத்திரியாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் அண்டம் முழுவதும் நிறைந்துள்ள ஈத்தர் சக்தியானது பூமி எங்கும் நிறைந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. அந்த ஈத்தர் சக்தியைத்தான் ஈசன் என்கிறார்கள் காலத்தால் அழியாத சித்தர்களும் இன்றைய அறிவியலரும்..
அறிவியலும் ஆன்மீகமும் ஆற்றல் மிகுந்ததாக எடுத்துரைக்கும் மகாசிவராத்திரி அன்று தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளைக் காண லட்சக்கணக்கண ஆலயங்களில் இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து வழிபாடுகள் நடத்துகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலியும், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் லட்சதீபங்களையும் காண கண்கோடி வேண்டும் என்பார்கள் பக்தர்கள்.
இந்த மகா சிவராத்திரி அன்று இரவு ஒவ்வொரு ராசியினரும் சில குறிப்பிட்ட திரவியங்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தவது மிகுந்த நன்மை அளிக்கும் என மெய்ஞான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி மேஷ ராசியினர் வெல்லம் கலந்த நீரினையும், ரிஷப ராசியினர் தயிரும், மிதுன ராசியினர் கரும்புச்சாறும், கடக ராசியினர் பால் கொண்டும், சிம்ம ராசியினர் சந்தனம் கலந்த பாலாலும், கன்னி ராசியினர் பால் மற்றும் நீராலும், துலாம் ராசியினர் பசும்பால் கொண்டும், விருச்சிக ராசியினர் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீராலும், தனுசு ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலாலும், மகர ராசியினர் நல்லெண்ணெய் கொண்டும் கும்ப ராசியினர் இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யாலும், மீன ராசியினர் குங்குமப்பூ கலந்த பாலாலும் அபிஷேகங்கள் செய்தால் வேண்டிய நன்மைகள் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபட முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவாலயங்களுக்கு வருவதாக சொல்லப்படும் நிலையில், நாமும் சிவ வழிபாட்டில் ஈடுபடுவோம்.. அனைத்து தெய்வங்களின் ஆசிகளை பெறுவோம்..
மாலை முரசு செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்..