ஆன்மீகம்

கலியுகத்தில் சுயம்புவாக தோன்றிய ஐயப்பன்… மகாராஜாக்கள் வணங்கிய குறை தீர்க்கும் சபரிமலை வாசன்!

குடும்பங்களுக்கு நல் வாழ்த்துக்களை அளிக்கும் சந்தான மூர்த்தியாக இருக்கும் இங்குள்ள சாஸ்தா...

மாலை முரசு செய்தி குழு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிழக்குக்கோட்டையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மணக்காடு தர்ம சாஸ்தா கோயில். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கலியுகத்தின் முதல் நாளில் நிறுவப்பட்டதாக நம்பப்படும் இந்த கோவிலில் மூலவர் சுயம்பு பால சாஸ்தாவாக தோன்றியதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள 108 சாஸ்தா கோயில்களில் ஒன்றாக இந்தக் கோயில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் தலைநகரமான திருவனந்தபுரம் ஆதிசேஷனின் நகரம்" அல்லது "முடிவில்லாத நகரம்" என்றும் அனந்தபுரி என்று அழைக்கப்படுகிறது.

இப்படி ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த இந்த நகரத்தில் உலகை வியக்கவைக்கும் பத்மநாபர் கோவில் அருகே அமைந்துள்ளது தான் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மணக்காடு தர்ம சாஸ்தா கோயில் ஆகும். கேரளாவை ஆண்டு வந்த பல மகராஜக்காளால் வணங்கப்பட்டதும் பராமரிக்கப்பட்டதுமான இவ்வாலயம் ஒரு மிகப்பெரிய சுற்றுச்சுவருக்குள் மிக நீண்ட கால பாரம்பரியத்தோடு காட்சியளிக்கிறது. கேரள பாணியில் உயர்ந்த கோபுரங்களோடு காட்சித்தரும் முகப்பிற்கு பின்னால் பழமையான ஸ்ரீகோவில் மனோகரமாய் காட்சியளிக்கிறது.

ஒரு காலத்தில் தர்மத்தை உபதேசிக்கும் சாஸ்தாவிற்காக புத்த மதத்தை சேர்ந்தவர்களால் இக்கோவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தர்ம உபதேசிப்பவனாக சாஸ்தா இருப்பதால் அவரின் அருளாசியின் படி கார்த்திகை மாதம் தொடங்கி ஒரு மண்டல காலம் ஐயப்ப பக்தர்கள் தர்மத்தை கடைபிடிக்கும் விரதத்தை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தர்மத்தை காக்கும் சாஸ்தா இக்கோவிலில் குடி கொண்டு இருப்பதால் இங்கு அதர்மத்தை கடைபிடிப்பவர்கள் யாரும் நுழைய முடியாது என ஐதீகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோயிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஸ்ரீகோவில் கருவறை மூடப்படாமல் திறந்து சூரிய ஒளியும் வான்மழை நீரும் சாஸ்தாவை தினம் தோறும் தரிசித்து வருகிறது. கோவிலில் முன்புறம் அழகிய தெய்வங்களின் உருவங்களோடு காணப்படும் கொடிமரத்தை கடந்து ஒரு அகண்ட விளைக்கினை தாண்டி கோவிலுக்குள் நுழையும் போது அங்கு ஒரு பலிக்கல் இருப்பதை காணமுடிகிறது.

பலிக்கல்லினை அடுத்து தங்கநிறத்தகடுகளால் ஆன கருவறையின் இரு புறமும் துவார பாலகர்கள் நின்றிருக்க தத்துவமஸி என்ற எழுத்துக்கள் வாயில் மேலே பதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உள்ளே தீபங்களின் பிரகாசத்தில் ஹரிஹர புத்ரனான தர்ம சாஸ்தா பாலகனாக சுயம்பு நிலையில் காணப்படுகிறார். கருவறைக்கு முன் சில தெய்வச்சிலைகளும் குதிரை வாகனச்சிலைகளும் காணப்படும் நிலையில் அங்கு நின்று கொண்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைப்பதை பிரார்த்திக்கும் போது அனைத்து நல்லவைகளையும் குழந்தையாக இருக்கும் சாஸ்தா அளிப்பதாக நம்பப்படுகிறது.

குடும்ப மகிழ்ச்சிக்காகவும், நல்ல சந்ததிகளை பெறவும், இங்குள்ள பால சாஸ்தா பக்தர்களுக்கு நால்லாசி வழங்குவதாக கூறப்படுகிறது. பகவான் விஷ்னுவின் அம்சம் அதிகரித்து காணப்படும் இங்குள்ள பால சாஸ்தா பூர்ண புன்னிய அவதாராமாக வீற்றிருக்கிறார். குடும்பங்களுக்கு நல் வாழ்த்துக்களை அளிக்கும் சந்தான மூர்த்தியாக இருக்கும் இங்குள்ள சாஸ்தா பக்தர்களின் குறைகளை கேட்டு மனமிறங்கி அருளும் குழந்தையாக உள்ளார்.

இங்குள்ள சாஸ்தா சுயம்புவாக உள்ளதால் பக்தர்கள் தரிசிக்கும் வகையில் வெள்ளியிலான திருமுகம் சாத்தபட்டிருக்கும். அதே சமயத்தில் அபிஷேகத்தின் போது மட்டும் திருமுகம் கழற்றப்பட்டு பிரதான மூல பிம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சாஸ்தா கோவிலில் கருவறை உயர்ந்து காணப்படும் நிலையில் இங்கு தாழ்ந்து பக்தர்கள் தெய்வத்தின் அருகில் இருப்பது போல பால சாஸ்தா காணப்படுகிறார். இதற்கு காரணம் இங்குள்ள சாஸ்தா எப்படி தோன்றினாரோ அதே போல தான் இன்றளவும் எந்தவித மாற்றமும் இன்றி வீற்றிருக்கிறார்.

மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.