ஆன்மீகம்

எதிரிகள் தொல்லை நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் – வணங்க வேண்டிய தெய்வங்கள்!

மேலும், ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபடுவதும் எதிர்ப்புகளை வெல்ல உதவும் சிறந்த ஆன்மிக வழிபாடாகக் கருதப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

ஒருவருடைய வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், தேவையற்ற அவதூறுகள், பொய்யான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற வழக்குகள் எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். சிலருக்கு சொந்தக்காரர்களே எதிரிகளாக மாறி சொத்துப் பிரச்சனைகளை உருவாக்குவார்கள்... இன்னும் சிலருக்கு தொழில் போட்டி, பணப் பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை எனப் பல வழிகளில் எதிரிகளின் தொல்லைகள் தொடரும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் நீண்ட காலமாக இழுபறி நீடிக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் ஜோதிட ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சில வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது மன உறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கும்...

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவம் என்பது எதிரிகள், கடன்கள், நோய்கள், வழக்குகள் மற்றும் போட்டிகளைக் குறிக்கக்கூடிய முக்கியமான பாவமாகும். இந்த ஆறாம் பாவத்தின் அதிபதி, அதன் அமைப்பு மற்றும் அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் வழக்குகளின் தன்மையை ஆராய முடியும். அதேபோல் ஏழாம் பாவம் வெளிப்படையான எதிரிகளையும், எட்டாம் பாவம் திடீர் பிரச்சனைகளையும், பன்னிரண்டாம் பாவம் இழப்புகளையும் குறிக்கிறது. குறிப்பாக ஆறாம் பாவம் வலிமையாகவும், அதன் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், லக்னாதிபதியின் பலம் சிறப்பாக இருந்தாலும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும் என்பது ஜோதிடக் கருத்தாகும்.

எதிரிகள் தொல்லை நீங்க வழிபட வேண்டிய தெய்வங்கள்!

எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதற்கும், எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கும் முதன்மையாக வழிபட வேண்டிய தெய்வமாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைச் சொல்லலாம். பகவான் நரசிம்மர் பக்தர்களைக் காப்பாற்றி, தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவர். எனவே எதிரிகளால் ஏற்படும் அச்சம், மன உளைச்சல், தேவையற்ற பிரச்சனைகள் நீங்க நரசிம்மரை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மரை வழிபட்டு, நெய்தீபம் ஏற்றி, நரசிம்மர் காயத்ரி மந்திரத்தைப் பாராயணம் செய்யலாம்....

அடுத்ததாக, ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பான பரிகாரமாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் உக்கிரமான திருவடிவங்களில் ஒன்றாகச் சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். எதிரிகளின் தொல்லைகள், எதிர்பாராத தடைகள் மற்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க வேண்டும் என்று இவரிடம் பிரார்த்தனை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரர் சன்னதிக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது...

மேலும், ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபடுவதும் எதிர்ப்புகளை வெல்ல உதவும் சிறந்த ஆன்மிக வழிபாடாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபடலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு, குங்கும அர்ச்சனை செய்து மனதாரப் பிரார்த்தனை செய்வது சிறப்பானதாகும்...

நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்க வணங்க வேண்டிய தெய்வங்கள்!

நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலமாக நடைபெற்று வருபவர்கள் ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும். தடைகளை நீக்கி நல்வழி காட்டுபவர் விநாயகர். சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, கொழுக்கட்டை படைத்து வழிபடலாம். வழக்குகளில் ஏற்படும் தடைகள் நீங்கி, உண்மை வெளிப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்...

அதேபோல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதும் சிறப்பானதாகும். செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடலாம். ஆஞ்சநேயர் வழிபாடு பயத்தைப் போக்கி, தைரியத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை...

குறிப்பாக நீண்ட நாட்களாக நடைபெறும் வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடவும் ஸ்ரீ காலபைரவரை வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, புனுகு அaல்லது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காலத்தின் அதிபதியாகப் போற்றப்படும் பைரவரை வழிபடுவதன் மூலம் தாமதங்கள் நீங்கி நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்...

மேற்கொள்ள வேண்டிய எளிய பரிகாரங்கள்!

தினமும் காலையில் குளித்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி, மனதிற்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது, தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம் ஏற்றுவது போன்ற வழிபாடுகளைத் தொடர்ந்து செய்யலாம். மேலும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் போன்ற தர்ம காரியங்களையும் மேற்கொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.