திருத்தலங்கள்

வெளிவந்த திருச்செந்தூர் முருகன் கோவில் ரகசியம்… 18 ஆம் நூற்றாண்டின் செப்பேட்டில் கிடைத்த அறிய தகவல்கள்!

பின்னர் முருகனின் சேவைகளுக்காக மடம் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது...

Nanda Kumar (நந்த குமார்)

திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதோடு 9 அடுக்குகளை கொண்ட கோபுரம் 157 அடி உயரம் கொண்டதாக கம்பீரமாய் கடலோடு சேர்ந்து காட்சிதருகிறது. பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ள இக்கோவில் அலைவாய், திருச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக கல்வெட்டு தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன. பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் போன்ற பல்வேறு தமிழ் மன்னர்கள் இக்கோயிலுக்குப் பங்களிப்பு செய்துள்ள நிலையில் கோவிலும் அதனை சுற்றியுள்ள முருகனின் நிலங்களும் காலப்போக்கில் பலருக்கு கைமாறியுள்ள பட்டயங்கள் தற்போது ஆய்வுக்கு வந்துள்ளன.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த கைலாசக் குடும்பர் என்பவர் அவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப்பட்டயம் ஒன்றை பழனியில் உள்ள தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் அளித்து விளக்கம் கேட்டுள்ளனர். அதன்படி பட்டயத்தை ஆய்வு செய்ததில் அது கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் அன்றைய திருச்செந்தூர் கோயில் நிலம், தென்இருகரை நாட்டுக் குடும்பர்களுக்கு விலைக் கிரையம் செய்து கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

28.7-க்கு 17.5 சென்டி மீட்டர் அளவில் 352 கிராம் எடையுடன் உள்ள செப்பேட்டின் இருபுறமும் 61 வரிகளில் இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. கடவுள் துணை என்று தொடங்கும் செப்பேட்டில் சாலிவாகன ஆண்டாக 1660, கொல்லம் ஆண்டாக 914, தமிழ் ஆண்டாக காளயுக்தி என குறிப்பிடப்படுகிறது. ஆவணி 17 ஆம் தேதி பௌர்ணமி நாளில் எழுதப்பட்ட இச்செப்பேட்டில் உள்ள பிற பஞ்சாங்க கால குறிப்புகளின் அடிப்படையில் பட்டயம் 29-08-1738 அன்று எழுதப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்தாரான தலத்தார், தானத்தார், நாட்டுக்கணக்கு ஆகிய பிள்ளை, நம்பியார், பண்டாரம், செட்டியார், கரையாளர் என வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் திருச்செந்தூர் முருகன் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பர்கள் 9 பேர்களுக்கு 19 பொன்னும் ஒரு பணமும் விலை நிர்ணயித்து கிரையம் செய்து சாசனப் பட்டயமாக எழுதிக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக நிலத்தை எழுதிக்கொடுத்த 12 கோயில் நிர்வாக அதிகாரிகளின் பெயர்கள், அதனை வாங்கிய 9 குடும்பர்களின் பெயர்களும், சாட்சி கையொப்பமிட்ட 5 பேர்களின் பெயர்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தை பெற்று பின்னர் முருகனின் சேவைகளுக்காக மடம் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அரிய தகவல்களாக செப்பேடு திருச்செந்தூர் முருகனை இளைய நயினார் என்றும், முருகன் கோயில் நிலத்தை திருவிளையாட்டம் என்றும், திருச்செந்தூரை மாகாளி சதுர்வேத மங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாள் என்பது தீட்டாகக் கருதப்படும் நிலையில் பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாட்களை புண்ணிய காலம் என்று குறிப்பிடுகின்றன.

இதன் காரணமாகவே அக்காலத்தில் கிரகண நாட்களில் கொடை அளிப்பது, கொடை பெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது, இந்த செப்பேட்டின் மூலம் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் சந்திர கிரகணம் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து இந்த நாளைத் தேர்ந்தெடுத்து, செப்பேடு எழுதப்பட்டிருப்பது பழந்தமிழர்கள் பெற்றிருந்த வானியல் அறிவையும் அவர்களின் நிபுணத்துவத்தையும் நிரூபித்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

இந்நிலையில் குடும்பர்களுக்கு விலைக்கிரையம் செய்யப்பட்ட நிலத்தின் 4 எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் பட்டயத்தை ஆய்வுக்கு கொடுத்த கைலாசக் குடும்பர், பட்டயத்தில் முதலில் குறிப்பிடப்படும் தென்கரை காட்டுப் பச்சேரி சித்திரபுத்திரக்குடும்பன் மகன் மாடக் குடும்பன் வழி வந்தவர் தான்தான் என்று நிரூபிக்க தம்மிடம் பிற ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாலைமுரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக பழனி செய்தியாளர் கார்த்திகேயனுடன் நந்தகுமார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.