hanuman 
திருத்தலங்கள்

இடர் களையும் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில்

இயற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள் பாலிக்கும் ஜெயமங்கள ஆஞ்சநேயர் ஆலயத்தினை பற்றி காண்போம்.

Anbarasan

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த .இடுகம்பாளையம் கிராமத்தில் அனுமந்தராய சுவாமி கோவிலில்  அழகு சுந்தரனாக ஆஞ்சநேயர் காட்சியாளிக்கிறார்.அவர் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு இடது கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி  பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

இந்த ஜெயமங்கள ஆஞ்சநேயர் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு சுமார் 700 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறது.

கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில், அவரது குலகுருவான வியாசராஜ தீர்த்தர் இங்கு நடந்து வந்த போது ,சுயம்புவாக தோன்றிய பாறையை கண்டுள்ளார். அனுமனின் அருள் நிறைந்த பாறை என்பதை உணர்ந்து அந்த பாறையின் முன்பாக விழுந்து வணங்கி அனுமனின் சிலையை புடைப்புச் சிற்பமாக வடிவமைத்து சிறிய ஆலயத்தையும் எழுப்பியதாக தல வரலாறு கூறுகிறது.

இந்த ஜெயமங்கள ஆஞ்சநேயர் ஆறு அடி உயரம் கொண்டவராகவும் ஆவிலை போன்ற வயிறு கொண்டும்,அணிமணி ஆரங்களோடு விளங்கும் அகன்ற மார்போடும், தி்ரண் உரமான புஜங்களில்  ஜொலிக்கும் திருமண் காப்புகளோடும், முத்து பற்களும் முற்வலிக்கும் பவள இதழ்களோடும், தலைக்கு மேலே மணி கட்டப்பட்ட வாலினை தூக்கியும் கருணை பொங்கும் கண்களோடும் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

சீதாபிராட்டியை தேடி இலங்கை செல்லும் வழியில் அனுமன் பல தடங்கல்களை சந்தித்து அவற்றை தன் வீரத்தாலும், விவேகத்தாலும் வெற்றி கண்ட பின்னர் இந்த பாறை மீது அமர்ந்து தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. பாறையின் மீிதுள்ள அனுமன் சிற்பத்தில், ஓங்கிய வலது திருக்கரத்தில் காணப்படும் தெய்வீகமான சுதர்சன ரேகை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரின் சக்தி என்பதால் இந்த அனுமனை தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள், முற்பிறவியில் செய்த பாவங்கள், இப்பிறவியில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்திருதலத்தில்  கண்களுக்கு புலப்படாமல் மூன்று சித்தர்கள் இங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடுகள் செய்து வருவதால் இந்த சக்தி நிறைந்த ஆலயத்தை  ஸ்ரீ அனுமந்தராயசாமி ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது..இயற்கை சூழ்ந்து பசுமையோடு காட்சியளிக்கும் இக்கோயிலுக்கு வலப் புறத்தில் ஒரு நீள்வடிவ சுயம்புப் பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு வடிவங்கள்.காட்சியளித்து பகதர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 

இந்த ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, மும்மூர்த்தியின் அனுகிரகமும் ஒருசேரக் கிடைப்பதாகவும் ஐதீகம். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு கிடைக்குமென்றும் திருமணம் மற்றும் சுபகாரியங்களில் இருக்கும் தடைகள்  நீங்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்

தங்கள் குறைகள் அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல் நீங்க வேண்டுமென பிராத்திக்கும் பகதர்கள்  ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி அரிசியை 30 நாட்கள் சேர்த்து இத்தல ஆஞ்சநேயருக்கு காணிக்கையாக செலுத்தும்போது தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுட்ன் தெரிவிக்கின்றனர்.

மாலைமுரசு செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் ஜாபர் சாதிக் உடன் கலைமாமணி நந்தகுமார்...