கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளிர்ச்சி மிகுந்த வெண்ணைமலையில் பாலசுப்ரமணியாராக முருகன் கோவில் அமைந்துள்ள நிலையில் அதன் அருகில் தேன் சுனை எனும் தெய்வீக சக்தி பெற்ற நீர் வற்றாது காணப்படுகிறது.
உலகினையும் அதில் வாழும் உயிரினங்களையும் படைப்புத் தொழிலாக செய்து வரும் பிரம்மன், தலைக்கனம் பிடித்து தானே எல்லாவற்றிற்கும் உயர்ந்தவன் என்று இருமாப்பு அடைந்துள்ளார். இதனையறிந்த சிவன் பிரம்மனின் அகந்தையை அடக்குவதற்காக படைப்புத் தொழிலை அவரிடமிருந்து பறித்து தேவலோக பசுவான காமதேனுவிடம் வழங்கினார்.
அள்ள அள்ள குறையாத வற்றாத செல்வங்களைத் தரும் தேவ பசுவான காமதேனு படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் போது, பூமியில் வாழும் எந்த உயிரினங்களும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக இந்த இடத்தில் வெண்ணையை குவித்து ஒரு மலையை உருவாக்கியது. இன்னும் சிறப்பாய் இந்த அற்புதமான மலைக்கு அருகே தேன் அருவி என்ற ஒரு வற்றாத சுனையை உருவாக்கி உயிரினங்களின் தாகத்தை தீர்த்ததாக இத்தல வரலாறுகள் கூறுகிறது.
பசுவினால் உருவாக்கப்பட்ட இந்த வெண்ணை மலை அருகே யோகி தேவன் என்ற ஒரு முனிவர் தவம் இருந்தபோது அவரது ஞானதிருஷ்டியில் தோன்றிய முருகப் பெருமான் இந்த வெண்ணை மலையில் தனக்கு ஒரு கோவில் அமைக்கும் படி கட்டளையிட்டுள்ளார்.
ஆறுமுகப் பெருமானின் ஆணைக்கு இணங்க கரூரை ஆண்ட ஒரு குறுநில மன்னனிடம், யோகி தேவ முனிவர், முருகனின் விருப்பத்தை தெரிவிக்க,அந்த குறுநில மன்னரால் வெண்ணை மலையில் உருவாக்கப்பட்ட கோயில் தான் தற்போது வெண்ணைமலை பாலசுப்பிரமணியன் கோவில் என்ற பெயரோடு காட்சியளிக்கிறது.
எப்போதும் குளிர்ச்சி நிறைந்த இந்த மலையில் மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோவிலின் கருவறையில் .பாலசுப்பிரமணியனாக வீற்றிருக்கும் முருகன் வேண்டியோருக்கு வேண்டியதை தரும் இறைவனாக அருள்பாலிக்கிறார்.
கருவறையை நோக்கிய வடமேற்கு சன்னதியில் பாலசுப்ரமணியசுவாமியின் பெற்றோரான காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சியின் திருவுருவங்கள் எழுந்தருளியிருக்க இடும்பன், விநாயகர், மலைக்காவலர் சன்னதிகளும் இக்கோவிலில் காணப்படுகிறது.
பாறை கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் கலைச் சிற்பங்களும் விளக்கு தூண்களும், வண்ண ஓவியங்களும் நிறைந்து காணப்படுகிறது.
இக்கோவிலின் சிறப்பாக பூமியில் 300 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தவரும், வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம்,ஆக்ருசணம், பேதனம், மரணம் போன்ற அஷ்டகர்ம மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரும், திருச்செந்தூரில் மீன் மழை பொழிய வைத்த கருவூரார் சித்தரின் சன்னதி, இந்த வெண்ணைமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் அமைந்திருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
சித்தர்களும், சிறந்த தீர்த்தங்களும் நிறைந்த இக்கோவிலின் நீரில் நீராடி முருகனை வழிபட்டால் தீராது பிரச்சனை தீர்வதோடு பொருட்செல்வமும் அருட்செல்வமும் பெற்று வாழலாம் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்..
மாலை முரசு செய்திகளுக்காக செய்தியாளர் அஜித் குமாருடன் கலைமாமணி நந்தகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்