விளையாட்டு

உலக சாம்பியன் குகேஷ்!

சதுரங்க விளையாட்டு குறித்து சொல்லி தருவதற்கோ, ஆலோசனை வழங்குவதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களோ ஒருவரும் இல்லை. முடியும் என்றால் முயற்சி எடு... முடியவில்லை என்றால் பயிற்சி எடு என கூறுவார்கள்.. இந்த வார்த்தைகளே உள்வாங்கியே நாள்தோறும் பயிற்சி எடுத்து, அதன் மூலம் முயற்சி எடுத்து ஒவ்வொரு போட்டியிலும் தன் தகுதியை வளர்த்துக் கொண்டு இன்று இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டராக கொண்டாடப்படுபவர்தான் குகேஷ்.

Jeeva Bharathi

சென்னையை சேர்ந்த குகேஷின் தந்தை பெயர் ரஜினிகாந்த்.. தாய் பத்மகுமாரி என்பவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இ.என்.டி. மருத்துவராக பணியாற்றி வந்த ரஜினிகாந்துக்கு தனது மகன் குகேஷுக்கு சதுரங்க போட்டியில் ஆர்வம் இருப்பதை பார்த்து வியந்து போனார். முதல் வேளையாக மருத்துவர் பணியை உதறித் தள்ளிய ரஜினிகாந்த், மகனை ஒவ்வொரு நாடாக அழைத்துச் சென்று அங்கு நடக்கும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு கோவாவில் நடந்த நேஷனர் ஸ்கூல் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற குகேஷ், அடுத்த 2 ஆண்டுகளும் பட்டத்தை தக்க வைத்தார். பின்னர் 2017-ம் ஆண்டில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் ரேட்டிங் கிடைக்கத் தொடங்கியது.

10 ஆண்டுகளாக தொடர் பயிற்சி மேற்கொண்டு வந்த குகேஷ், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 13 சுற்றுகளிலும் முன்னேறினார் குகேஷ்.

இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதியன்று 14-வது சுற்று தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் 18 வயதான குகேஷ் பங்கேற்க, அவரை எதிர்த்து சீன போட்டியாளர் டிங் லிரென் விளையாடினார்.

இந்த இறுதிச் சுற்றில் 7.5 புள்ளிகளை யார் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். இதில் சீன போட்டியாளர் லிரென் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். கருப்பு நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷ், படபடவென நகர்த்தினார்.

ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 55-வது மூவ்மெண்ட்டின்போது சீன போட்டியாளர் லிரென் ஒரு சிறிய தவறிழைத்தார். அது குகேஷுக்கு சாதகமானது.

அதாவது, எஃப் 4 கட்டத்தில் இருந்த யானையை எஃப் 2 கட்டத்திற்கு நகர்த்தினார் லிரென். இப்படி அவர் நகர்த்தியிருக்கக்கூடாதுதான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்ட குகேஷ், பி.2 கட்டத்தில் இருந்த தனது காயைக் கொண்டு லிரெனின் யானை காயை தட்டித் தூக்கினார்.

பின்னர் ஜி 1 கட்டத்தில் இருந்த ராஜாவின் மூலம் யானையை வெட்டி, பிஷப் மூலம் எதிர் தரப்புக்கு செக் வைத்தார் குகேஷ். இறுதி நொடி வரை சீன போட்டியாளருக்கு டென்ஷன் கொடுத்து வந்த குகேஷ் சாம்பியன் பட்டத்தை தட்டி சரித்திரம் படைத்தார்.

விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது தமிழர் என்ற பெருமையை பெற்றவர் என அறிவிக்கப்பட்ட உடனேயே குகேஷின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. இந்த வெற்றியை என்னை நேசித்த தாய்நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன் என ஆனந்தக்கண்ணீருடன் பேசினார்.

உலகிலேயே இளம்வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்டோர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்