துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எப்போதும் இல்லாத வகையில், வரலாற்றில் ஒரு பொன்னான தருணமாக, 14 வயதே ஆன SM யுகன், 16வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் டிராப் பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்று மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், 27 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு மத்தியில், SM யுகன் தன் கடினமான முயற்சியால் சிறப்பாக செயல்பட்டார்.
இந்தியாவுக்காகப் போட்டியிட்ட யுகன்
டிராப் யூத் ஆண்கள் – தனிநபர் தங்கம்
டிராப் யூத் ஆண்கள் – அணிகளுக்கான தங்கம்
ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஆசியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் துப்பாக்கிச் சுடும் வீரர்களில் ஒருவராக அவரை முன்னிருத்தியிருக்கின்றன. இது இந்தியாவின் நற்பெயருக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வெற்றிக்குப் பிறகு பேசிய யுகன், தனது வெற்றிக்குக் காரணம் தனது இடைவிடாத பயிற்சி, பயிற்சியாளர்களின் ஆதரவு, மற்றும் குடும்பத்தினர் மற்றும் கூட்டமைப்பின் ஊக்கமே என்று குறிப்பிட்டார்.
“இந்தியாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தி, எனது நாட்டிற்காக வெற்றி பெற்றது பெருமை அளிக்கிறது. இது ஒரு தொடக்கம்தான்,” என்று அவர் கூறினார்.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் 16வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், வளர்ந்து வரும் திறமைகளுக்கும் அனுபவமிக்க வீரர்களுக்கும் ஒரு முக்கிய களமாகத் திகழ்கிறது. எனினும், யுகனைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு நடந்த போட்டி, அவர் வரலாற்றை உருவாக்கிய ஒரு நிகழ்வாக எப்போதும் நினைவுகூரப்படும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.