``அப்பாவைப் போலவே அதிரடி" ஆர்யவீர் சேவாகின் 160 ரன்கள்! UAE-ஐ வீழ்த்தி ஆசியக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா! 
விளையாட்டு

``அப்பாவைப் போலவே அதிரடி" ஆர்யவீர் சேவாகின் 160 ரன்கள்! UAE-ஐ வீழ்த்தி ஆசியக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

131 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த அவர், அதன்பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார். இறுதியில் 168 பந்துகளில் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மாலை முரசு செய்தி குழு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இளம் வீரர்கள் மீண்டும் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக். தனது அதிரடியான பேட்டிங்கால் 160 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். இதன் மூலம் இந்திய அணி ஆசியக் கோப்பை அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

ஓமனின் அல் அமெராத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லக்ஷ்யா ராஜேஷ் ராய்ச்சந்தானியும் ஆர்யவீர் சேவாக்கும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.

கேப்டன் லக்ஷ்யா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு ஆர்யவீருடன் இணைந்த வி.கே. வினீத், அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். இருவரும் அமீரகப் பந்துவீச்சாளர்களைச் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு நிதானமாக விளையாடிய ஆர்யவீர், பின்னர் அதிரடிக்கு மாறினார்.

Aryavir Sehwag Slashes 160 Runs as India Beats UAE

131 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த அவர், அதன்பிறகு பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார். இறுதியில் 168 பந்துகளில் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 17 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்குத் துணையாக விளையாடிய வி.கே. வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட்டும் இந்தப் போட்டியில் விளையாடினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், அதிரடியாக ரன் சேர்க்க முயன்று 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது.

310 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இலக்கை நோக்கி வேகமாக முன்னேற முடியாமல் அந்த அணி தடுமாறியது. அமீரக அணியில் அகமது குதாதா அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். நூர் உல்லா அயோபி 25 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், மற்ற வீரர்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியின் பந்துவீச்சில் இஷான் சூட் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கவ்யா பரேஷ் படேல், அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், யஷ்வர்தன் சிங் சவுகான், ஆர்யன் சவ்சானி, மோகித் உல்வா ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 49.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. குறிப்பாக, வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள அந்தப் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் இதே ஆட்டத்தைத் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.