ஐபிஎல் 2026 தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ரன்கள் அடிப்படையில் ஐபிஎல் வரலாற்றிலேயே மும்பை அணி சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி இதுவாகும். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. சாம்சன் வெறும் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, சென்னை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் வெறும் 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்த மோசமான தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவர்பிளே ஓவர்களில் ஏற்பட்ட சறுக்கலே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார். ஆட்டம் தொடங்கிய முதல் 3 ஓவர்களுக்குள்ளேயே மும்பை அணி 11 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தனிஷ் மலேவர் மற்றும் நமன் திர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், குயிண்டன் டி காக் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் முழுமையாக எங்கள் கையை விட்டுப் போய்விட்டது என்றும், அதன் பிறகு மீண்டும் ஆட்டத்திற்குள் வருவது கடினமாகிவிட்டது என்றும் ஹர்திக் கவலையுடன் குறிப்பிட்டார்.
ஆட்டத்தின் இடையில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி 73 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால் இந்த ஜோடி பிரிந்த பிறகு சென்னை அணி ஆட்டத்தை முழுமையாகத் தன் வசம் இழுத்துக் கொண்டது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் அபாரமாகப் பந்துவீசி 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பையின் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தார். மும்பை தரப்பில் அல்லாஹ் கசன்பர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஆடுகளம் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஹர்திக், பிட்ச் மீது பழி போட விரும்பவில்லை என்றும், எதிரணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 207 ரன்கள் எடுத்த அதே பிட்சில் தாங்கள் சரியாக விளையாடவில்லை என்பதே உண்மை என்றும் நேர்மையாக ஒப்புக்கொண்டார்.
சஞ்சு சாம்சனின் ஆட்டத்தைப் பாராட்டிய ஹர்திக், அவர் இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தை அடித்து மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதாகவும், மற்ற சென்னை பேட்ஸ்மேன்களும் அவ்வப்போது ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியதாகவும் கூறினார். இவ்வளவு பெரிய இலக்கை எட்ட வேண்டும் என்றால் தங்களுக்குச் சிறப்பான தொடக்கம் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அது அமையவில்லை என்றார். மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்குமா என்ற கேள்விக்கு, அது குறித்து அணி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஏப்ரல் 29 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.