இந்திய டி20 கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தாலும், தற்போது அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஆலோசித்து வருகிறது. ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயரை, இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக நியமிக்க பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் பல இளம் வீரர்களை அறிமுகப்படுத்தவும் திட்டம் உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து தேர்வுக் குழு கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ரன் குவிக்க அவர் தடுமாறி வருவது பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை கடைசி நேரத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மறுபுறம், சூர்யகுமாரின் மோசமான ஃபார்ம் காரணமாக, அவர் ஒரு பேட்ஸ்மேனாகக் கூட அணியில் இடம் பிடிப்பது சந்தேகமே என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நல்ல ரெக்கார்டு வைத்திருந்தாலும், சமீபத்திய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் ஆடிய 10 போட்டிகளில் வெறும் 195 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதற்கு முக்கியக் காரணமாக, அவருக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மணிக்கட்டு காயம் (Wrist issue) சொல்லப்படுகிறது. வலியுடனேயே அவர் போட்டிகளில் விளையாடி வருவதாகவும், அது அவரது பேட்டிங்கை பாதிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுவே அவரது கேப்டன் பதவி பறிபோவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதே சமயம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். அவரது தலைமையில் அந்த அணி ஆடிய முதல் 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பேட்டிங்கிலும் 9 இன்னிங்ஸ்களில் 333 ரன்கள் குவித்து ஸ்ரேயாஸ் அதிரடி காட்டி வருகிறார். ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு ஒரு டி20 தொடரைக் கூட தோற்காத கேப்டனாக சூர்யகுமார் இருந்தாலும், 2023-க்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடாத ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது ஜாக்பாட் அடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.