விளையாட்டு

20 முறை மும்பையை வீழ்த்திய ஒரே அணி! புது அவதாரம் படைத்த சிஎஸ்கே

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது...

Mahalakshmi Somasundaram

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் 2026 மோதலில், மும்பை இந்தியன்ஸ் அணியை மிக எளிதாக வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு ஜாம்பவான் அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் மும்பை 21 போட்டிகளிலும், சென்னை 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, 11 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே வெற்றியை எட்டியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மொத்தம் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகள் மோதிய இந்தத் திரில்லர் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை பந்துவீச்சாளர்கள் 159 ரன்களுக்குள் சுருட்டினர். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை அணி பந்துவீச்சு, ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கார்த்திக் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, முந்தைய போட்டியில் சந்தித்த தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வெற்றியைப் பதிவு செய்தனர்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நிதானமாக விளையாடி இன்னிங்ஸை வழிநடத்தினார், மறுபுறம் கார்த்திக் சர்மா 54 ரன்கள் குவித்து கடைசி பவுண்டரியை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலம் 10 அணிகள் கொண்ட புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய ருதுராஜ், ஒரு நல்ல தொடக்கம் கிடைப்பது மிகவும் முக்கியம், யாராவது ஒரு பேட்டர் கடைசி வரை விளையாடினால் மட்டுமே வெற்றி உறுதியாகும் என்பதை உணர்ந்து விளையாடியதாகத் தெரிவித்தார். தான் நினைத்தது போலவே கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் சோதனையான ஒன்றாகவே நீடிக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியிடம் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்த மும்பை, இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் முடங்கியுள்ளது. இது தங்களுக்குச் சாதகமான சீசன் இல்லை என்பதை மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். சென்னை அணி வீரர்கள் எங்களை விட பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாக அவர் பாராட்டினார்.

சென்னை அணியின் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் தான். இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது மிக முக்கிய விக்கெட்டுகளான ரயான் ரிகெல்டன் மற்றும் திலக் வர்மாவை அவுட் செய்து மும்பை அணியின் ரன் வேகத்தைத் தடுத்து நிறுத்தினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, மீடியம் பேஸ் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 32 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். நூர் அகமது போன்ற பந்துவீச்சாளர்களுக்கு இது போன்ற ஆடுகளங்கள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று ருதுராஜ் புகழ்ந்து தள்ளினார்.

மும்பை அணி தரப்பில் நமன் தீர் 57 ரன்கள் குவித்து அந்த அணிக்கு ஓரளவு கௌரவமான ஸ்கோரைத் தந்தார். ஆனாலும் நடுகள ஓவர்களில் ரன் எடுக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். இறுதியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் அவர் ஆட்டமிழந்தார். ஓவர்டன் தனது 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்