2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவிற்கு எதிராக நடைபெறவிருந்த லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்தது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த முடிவிற்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் நோக்கில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களைத் தொடர்பு கொண்டது. ஆனால், பாகிஸ்தானின் இந்தத் தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஒரு நாடு கூட ஆதரவு தெரிவிக்காதது அந்த நாட்டு வாரியத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
வங்கதேச அணி இந்தியாவிற்குப் பயணிக்க மறுத்த காரணத்தால் அந்த அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தே, பாகிஸ்தான் இந்த "புறக்கணிப்பு" முடிவை எடுத்ததாகக் கூறியது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி (ICC) இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டாலும், கிரிக்கெட் வாரியம் முறைப்படி ஐசிசியை அணுகாதது அந்த நாட்டு வாரியத்தின் நிர்வாகச் சிக்கலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. பாகிஸ்தான் அண்டர்-19 அணி மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இந்தியாவிற்கு எதிராக விளையாடும்போது, ஆடவர் அணி மட்டும் விளையாட மறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. பாகிஸ்தானின் இந்தச் செயல் தேவையற்ற ஒரு நெருக்கடியை உருவாக்குவதாகவே கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் சமூகத்தில் பாகிஸ்தான் தற்போது முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒருவேளை பிப்ரவரி 15-ஆம் தேதி திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி களமிறங்காவிட்டால், இந்திய அணிக்கு நேரடியாக 2 புள்ளிகள் வழங்கப்படும் (Walkover). இது பாகிஸ்தானின் நெட் ரன் ரேட்டைப் பாதிப்பதோடு, அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதையும் கேள்விக்குறியாக்கும். மேலும், ஐசிசி விதிமுறைகளின்படி, போட்டியைப் புறக்கணிக்கும் அணிக்குச் சுமார் 240 கோடி ரூபாய் வரை அபராதம் அல்லது சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஐசிசி எடுக்க வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் பாகிஸ்தானின் நிதியிலிருந்தே ஈடுகட்ட ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலிலும் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி ஏற்கனவே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி திட்டமிட்டபடி மைதானத்திற்கு வந்து டாஸ் போடக் காத்திருக்கும். பாகிஸ்தான் தனது முரட்டுப் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாவிட்டால், அது அந்த நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஐசிசி மேற்கொள்ளும் அவசரக் கூட்டத்தில் இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்