நிறைய பெயர்கள் விவாதிக்கப்பட்ட பிறகு, ஜாகீர் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவர், பல ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளார். மிக முக்கியமாக, தோனி கேப்டனாக செய்யலபட்ட 2011 உலகக் கோப்பையை வெல்வதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. கபில் தேவுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்த இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்!
இதற்கு முன்னர், பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராகவும், 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, 5 முறை கோப்பையை வென்ற சிறப்புமிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளார்.
இவரது நியமனம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுநேர இயக்குநர் ரூபா குருநாத், “ஜாகீர் கான் சிறப்பான கிரிக்கெட் அனுபவங்களைக் கொண்டவர். இளம் வீரர்களைப் பண்படுத்தும் அவரது திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வழிகாட்டுதல் இந்த அணியின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என அறிக்கையில் கூறியுள்ளார்.
CSK தலைவர் சீனிவாசன், “2000-களில் இந்திய அணியின் வெற்றிக்கு ஜாகீர் முக்கியக் காரணியாக இருந்தார். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளைகளில் ஒருவர். மேலும், அவரை எங்கள் குடும்பத்தில் இணைத்துக்கொள்வதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
என்னதான் ஐந்து கோப்பைகளை வென்ற அணியாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 3 சீசன்களாக பிளே-ஆஃப் செல்ல முடியாமல் திணறி வருகிறது.
17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளமிங், கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகினார். தற்போது இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹேமங் பதானி உள்ளிட்ட பலரது பெயர்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அணியின் மூத்த வீரராகவும் முக்கிய முகமாகவும் இருக்கும் எம்.எஸ்.தோனி, ஜாகீர் கானை ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
தோனி வருகின்ற சீசனில் வீரராகக் களமிறங்குவாரா அல்லது நிர்வாகப் பொறுப்புகளை ஏற்பாரா என்பது இன்னும் தெரியவில்லை. (2026-ல் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.)
புதிய பொறுப்பை ஏற்றுள்ள ஜாகீர் கான், “ஒரு கிரிக்கெட் வீரராக, நான் சிஎஸ்கே அணியை களத்தில் எதிர்கொண்ட போட்டிகளை முழுமையாக ரசித்திருக்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் உருவாக்கும் சூழல் அதை இன்னும் சிறப்பானதாக ஆக்குகிறது. இத்தகைய வளமான வரலாற்றைக் கொண்ட இந்தப் பாரம்பரிய அணியில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்