விளையாட்டு

 காலமானார் ”பறக்கும் சீக்கியர்” என்று அழைக்கப்படும் முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்.!  

Malaimurasu Seithigal TV

இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீரரான மில்கா சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.இவருக்கு வயது 91,

`பறக்கும் சீக்கியர்` என்று அழைக்கப்பட்ட மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங்கிற்கு ஒரு கட்டத்தில் கொரோனா நெகட்டிவ் ஆனதால் உடல்நிலை சீரானது.அதனால் அவரது  குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இருந்தாலும்,அவருக்கு கொரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக மீண்டும் ஆக்சிஜன் அளவு குறைந்து உடல்நிலை மோசமானது.

இதன் காரணமாக சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பலன் அளிக்காததால் மில்கா சிங் காலமானார்.

`பறக்கும் சீக்கியர்` என்று அழைக்கப்பட்ட மில்கா சிங்,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கா இடத்தை பெற்று புகழ்பெற்றவர்.ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் போட்டியிட்டு 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தடகள வீரர்  மில்கா சிங் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்."எண்ணற்ற இந்தியர்கள் இதயத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருந்த ஒரு விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். அவரின் உற்சாகம் ஊட்டும் பண்பு மில்லியன் கணக்கானவர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அவரின் இழப்பு பெருந்துயர்."என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மில்கா சிங்கின் மனைவி நிர்மல் மில்கா சிங் ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.