விளையாட்டு

சதம் அடிக்காமல் தொடர்ச்சியாக 100 போட்டிகளை கடந்த விராட் கோலி ! கவலையில் ரசிகர்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் அடிக்காமல் தொடர்ச்சியாக 100 போட்டிகளை கடந்துள்ளார். 

Tamil Selvi Selvakumar

மும்பை நகரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் பல விறுவிறுப்பான தருணங்களுடன் வெற்றிகரமாக 3ஆவது வாரத்தை கடந்துள்ளது. நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இதில்  டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து பெங்களூரு அணி பேட்டிங்கில் இறங்கியது. இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட் ஆனார்.  ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக மாபெரும் சாதனை படைத்த அவர் 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்படி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகியுள்ளது அவரின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

சமீப காலங்களாகவே பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். அவர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தார். அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஒருசதம் கூட அடிக்கவில்லை. டெஸ்ட்போட்டி, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் என எல்லா வகை ஆட்டங்களிலும் சேர்த்து கடந்த நூறு போட்டிகளில் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.