Amanpreet Gill passed away Amanpreet Gill passed away
விளையாட்டு

36 வயதான கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு! - விராட் கோலி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இரங்கல்

36 வயதே ஆன கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vinvizhi Leninton

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடக்க காலங்களில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக விளையாடிய முன்னாள் 36 வயதே ஆன கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் பஞ்சாப் மாநில மூத்த தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமன்பிரீத் சிங் கில்லின் மறைவுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில், “பஞ்சாப் முன்னாள் வீரரும், மூத்த தேர்வுக்குழு உறுப்பினருமான அமன்பிரீத் சிங் கில்லின் மறைவு எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங்கும் தனது இரங்கலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “அமன்பிரீத் சிங் கில்லின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. எங்கள் ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தில் அவருடன் ஆடைமாற்றும் அறையை பகிர்ந்திருக்கிறேன். அமைதியான மற்றும் கடின உழைப்பாளியான வீரராக அவர் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்,” என்று யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

அமன்பிரீத் சிங் கில், 2007ஆம் ஆண்டு இந்திய இளையோர் அணிக்காக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் ஒரு இளையோர் டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். அந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை முன்னாள் ஆல்-ரவுண்டர் திசாரா பெரேராவின் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். இருப்பினும், 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான உலகக்கோப்பை வென்ற இந்திய U-19 அணியில் அவர் இடம்பெறவில்லை.

இதற்கிடையில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளது. “பஞ்சாப் அணிக்காக பெருமையுடன் விளையாடிய அமன்பிரீத் சிங் ஷெர்கில்லின் மறைவு எங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் உலகிற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.