2026 ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் தடுமாறிய சிஎஸ்கே அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி முக்கிய திருப்பு துணையாக இருக்கும் என தெரிகிறது. அணியின் மனநிலையை மாற்றிய ஒரு முக்கிய தருணமாகவும் பார்க்கப்படுகிறது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. தொடக்கத்தில் கேப்டன் ருதுராஜ் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து எப்போது போல ஏமாற்றமளித்தார். அதனை சமாளிக்கும் வகையில் சஞ்சு சாம்சன் தனது ஆட்டத்தை அபாரமாக வெளிப்படுத்தினார். 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த அவர், இன்னிங்ஸை நிலைநிறுத்த முக்கிய பங்கு வகித்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் போட்ட ஆயுஷ் மாத்ரே, மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் தொடர் சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். வெறும் 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்த அவரது அதிரடி ஆட்டம், சென்னை அணியின் ரன் விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. இந்த இருவரின் ஆட்டத்தால் சிஎஸ்கே 190-ஐ கடந்த வலுவான ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது. அடுத்தடுத்த வந்த வீரர்கள் பெரிய பங்களிப்பு செய்யவில்லை என்றாலும், தொடக்கத்தில் குவித்த ரன்கள் அடித்தளம் அமைக்க உதவியது.
193 ரன்கள் என்ற ஈஸி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பத்திலேயே அழுத்தத்தை சந்தித்தது. பின் ஆலன் மிக விரைவில் அவுட்டானதும், நரைன் அதிக நேரம் நிலைக்காததும் அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக கொல்கத்தா அணியால் பெரிய பார்மை கொண்டுவர முடியவில்லை. பில்டிங் ககில் கலக்கிய சிஎஸ்கே அணியால், கொல்கத்தா 160 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக நூர் அகமது தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியின் ரிதத்தை முற்றிலும் குலைத்தார். அவருக்கு துணையாக அன்ஷுல் கம்போஜ் துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த வெற்றி சிஎஸ்கே அணிக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. சீசன் தொடக்கத்தில் பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சிஎஸ்கே, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. அணியின் நெட் ரன் ரேட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களின் செயல்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது பாயின்ட்ஸ் டேபிளில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே, அடுத்ததாக ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த வெற்றியை தொடர்ச்சியாக மாற்றும் திறன் இருந்தாலேயே பிளேஆஃப் வாய்ப்பு உறுதியானதாக மாறும்.
சேப்பாக்கத்தில் கிடைத்த இந்த 32 ரன்கள் வெற்றி, சிஎஸ்கே அணியின் ஒரு சாதாரண லீக் வெற்றி அல்ல; அது ஒரு வலுவான கம்பேக் சிக்னல். அடுத்தடுத்த போட்டிகளில் இதே ஆட்டத்தை தொடர்ந்தால், சிஎஸ்கே மீண்டும் தனது பழைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்