ஐபிஎல் 2026 தொடரில் விளையாடும் ஒரே நட்சத்திர சகோதரர்கள் ஜோடி க்ருணால் பாண்ட்யா மற்றும் ஹர்திக் பாண்ட்யா மட்டும்தான். இதில் க்ருணால் பாண்ட்யா நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார், ஹர்திக் பாண்ட்யா ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இந்த சீசனுக்கு முன்னதாக, இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வராத நிலையில், சமீபத்தில் க்ருணால் பாண்ட்யா அளித்த ஒரு பேட்டி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கிரிக்பஸ் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், க்ருணால் பாண்ட்யாவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் சிறந்த பேட்டர் யார்? என்ற கேள்விக்கு கிறிஸ் கெய்ல் என்றும், சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி என்றும் அவர் பதிலளித்தார். அதேபோல் சிறந்த ஃபீல்டராக பொல்லார்டையும், தனக்குப் பிடித்த மைதானமாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தையும் அவர் குறிப்பிட்டார். சிறந்த கவர் டிரைவ் ஆடுபவராக விராட் கோலியையும், சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ராவையும் அவர் தேர்வு செய்தார். குறிப்பாகச் சிறந்த ஃபினிஷர் யார்? என்ற கேள்விக்குத் தனது தம்பி ஹர்திக் பாண்ட்யா மற்றும் கைரன் பொல்லார்டு பெயர்களைக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் க்ருணால் பாண்ட்யா, மீண்டும் இந்திய தேசிய அணியில் இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது தனது முழுக் கவனமும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருவதில் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார். இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என்றும், ஆனால் அது குறித்துத் தான் அதிகம் கவலைப்படுவதில்லை என்றும் அவர் வெளிப்படையாகப் பேசினார். தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களைச் சரியாகச் செய்தால் மற்றவை தானாக நடக்கும் என்று அவர் நம்புகிறார்.
க்ருணால் பாண்ட்யா கடைசியாக 2021 ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தமாக 254 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கருதும் க்ருணால் பாண்ட்யா, மீதி விஷயங்களைக் கடவுளிடம் விட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026-ல் இவர் காட்டும் அதிரடி மீண்டும் இவரை நீல நிற ஜெர்சியில் அமர வைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.