விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில். உச்சரிக்கப்பட்ட ராகுல் டிராவிட் பெயர் - செம கெத்து மொமண்ட்!

கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் தேடி வரும் என்று ராகுல் டிராவிட் கூறுவார்,

மாலை முரசு செய்தி குழு

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் சுற்றில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணி கடைசி வரை போராடிய போதிலும், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் லபுஷேன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெஷாவர் ஜால்மி அணியுடன் மோத உள்ளது.

இந்த பரபரப்பான வெற்றிக்கு பிறகு பேசிய ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அணியின் மன உறுதிக்கு டிராவிட்டின் தத்துவமே காரணம் என்று குறிப்பிட்டார். நான் வீசிய ஒரு மோசமான ஓவரால் மிகுந்த வருத்தத்தில் இருந்தேன், ஆனால் கடைசி ஓவரை வீசிய ஹுனைன் ஷா பதற்றமின்றி செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்தார். கடினமாக உழைப்பவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்டம் தேடி வரும் என்று ராகுல் டிராவிட் கூறுவார், அது இன்று ஹுனைன் விஷயத்தில் உண்மையாகிவிட்டது என்று முகமது அலி உருக்கமாகத் தெரிவித்தார்.

முன்னதாக பெஷாவர் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஹுனைன் ஷா தடுமாறிய நிலையில், இந்த முக்கிய போட்டியில் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு சிறப்பாகப் பந்து வீசியதை முகமது அலி வெகுவாகப் பாராட்டினார். ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் லபுஷேன் 39 ரன்களும், சைம் அயூப் 38 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இஸ்லாமாபாத் தரப்பில் இமாத் வாசிம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் அணியில் மார்க் சாப்மேன் 43 ரன்களும், ஹைதர் அலி 31 ரன்களும் எடுத்து வெற்றிக்காகப் போராடினர். இருப்பினும், கடைசி நேரத்தில் ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் தோல்வியைத் தழுவினர். முகமது அலி மற்றும் ஹுனைன் ஷா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹைதராபாத் அணியின் இறுதிப்போட்டி கனவை நனவாக்கினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.