கல்லேவில் தொடங்கியுள்ளது இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி. இந்திய அணி எந்த ரிஸ்க்கும் இல்லாத பிளேயிங் 11 உடன் களமிறங்கியிருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியே பெரும்பாலும் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த சாய் சுதர்சன் இடத்தில் மட்டும் தேவதத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்.
பந்துவீச்சு பிரிவில் இந்தியா தைரியமான முடிவை எடுத்திருக்கிறது. மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன், வேக பந்துவீச்சுக்கு முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மட்டுமே களமிறங்குகின்றனர். டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.
"பிட்ச் நல்லா இருக்கு, வானிலையும் நல்லா இருக்கு. அதனால முதலில் பேட்டிங் செய்யறோம். இதுக்கு முன்னாடி விளையாடின அதே அணியையே இப்போவும் தேர்வு செஞ்சிருக்கோம். ரெண்டு வேக பந்துவீச்சாளர்கள், மூணு ஸ்பின்னர்கள்னு மொத்தம் ஐந்து பந்துவீச்சாளர்கள் இருக்காங்க. நாட்டுக்காக அணியை வழிநடத்துறது எப்போவுமே பெருமையான விஷயம்தான், இப்போ இன்னும் அதிகமா ஸ்பெஷலா உணர்றேன். ஏன்னா இது சுதந்திர தினம், அதோட நமக்கு 600வது டெஸ்ட் மேட்ச். அதனால இன்னைக்கு நல்ல கிரிக்கெட் நாள் ஆகும்னு நம்பறேன்," என்று டாஸுக்குப் பிறகு கில் தெரிவித்தார்.
இலங்கை அணியிலும் மாற்றங்கள் நடந்துள்ளன. பதும் நிசாங்காவுக்குப் பதிலாக நிஷான் மதுஷ்கா சேர்க்கப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில், நிரோஷன் டிக்வெல்லா விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்கிறார். புதுமுகமான கேஷரா நுவந்தாவுக்கு இந்தப் போட்டி மூலம் டெஸ்ட் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, "பிட்ச் நல்லா இருக்கு, நானும் முதலில் பேட்டிங் செய்யலாம்னுதான் நினைச்சேன். இது நல்ல உலர்ந்த பிட்ச். ரெண்டு வேக பந்துவீச்சாளர்கள், ரெண்டு ஸ்பின்னர்கள், அதோட நானும் சோனல் தினுஷாவும் சேர்ந்து ஆல்ரவுண்டர் பொறுப்பையும் ஏத்துக்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் விளையாட கிடைச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு," என்று தெரிவித்தார்.
ஆட்டத்தில் கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக தொடங்கினார். 32 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வால் மீது பந்துவீச்சாளர் விழுந்ததாலும் அதை கவனிக்காமல் கே.எல். ராகுல் ஓடி வந்துவிட்டதாலும் ரன் அவுட் ஆகிய நேர்ந்தது.
இந்திய அணி (பிளேயிங் XI): யசஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவதத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, த்ருவ் ஜுரேல், மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இலங்கை அணி (பிளேயிங் XI): லஹிரு உதார, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், கமிண்டு மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கேஷரா நுவந்தா, பிரபத் ஜெயசூர்யா, லஹிரு குமார, அசித்தா பெர்னாண்டோ.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்