இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), வரும் அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று (செப்.25) அறிவித்துள்ளது.
துணை கேப்டன் மாற்றம்: காயம் காரணமாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால், அவருக்குப் பதிலாகச் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகள் முறையே அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளன.
ஃபிட்னஸ் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், வேகப்பந்து வீச்சின் தூணான ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளிக்காத காரணத்தால், பேட்ஸ்மேன் கருண் நாயரைத் தேர்வுக் குழுவினர் அணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளதால், சர்பராஸ் கான் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாகப் பெறக்கூடிய 60 புள்ளிகளில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் பட்டியலில் 46.67 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, தேர்வுக் குழுவினர் ஷுப்மன் கில்லின் முதல் உள்ளூர் தொடருக்காக அணியின் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துள்ளனர். WTC அட்டவணையில் ஒவ்வொரு புள்ளியும் முக்கியம் என்பதால், அணியில் பரிசோதனை முயற்சிகளைத் தவிர்க்க விரும்புவதாகத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
கருண் நாயர் நீக்கம் குறித்து பேசிய அகர்கர், "கருண் நாயரிடம் இருந்து நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். அவர் ஒரு இன்னிங்ஸுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. ஆனால், தேவ்தத் படிக்கல் கூடுதலாகப் பல விஷயங்களை அளிக்கிறார். ஒவ்வொரு வீரருக்கும் 15-20 வாய்ப்புகள் வழங்க விரும்புகிறோம், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. படிக்கல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார், அதனால்தான் அவர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு ஃபிட்டாக இல்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடருக்கு அவர் திரும்புவார் என்று நம்புகிறோம்." என்றார்.
சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.