இந்தியா - ஜப்பான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மைதானம் ஈரமாக இருப்பதால் தாமதமாகியிருக்கிறது. இந்த இரு அணிகளும் முதல் முதலாக இந்த சுசுக்கி கோப்பை போட்டியில் எதிர்கொள்கின்றன.
சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி, செப்டம்பர் 22 காலை 9:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஐச்சி-நகோயாவில் நடைபெறவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, இது இரு அணிகளுக்குமான இறுதிப் பயிற்சி ஆட்டமாக அமையும்.
அத்துடன் இந்தியா - ஜப்பான் இடையிலான 75 ஆண்டு தூதரக உறவுகளை கொண்டாடும் வகையிலும் இந்த போட்டி அமைகிறது.
டெலியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3-0 என வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, அதே வீரர்களுடன் ஜப்பானுக்கு எதிராக களமிறங்குகிறது.
சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து கேப்டனாக வழிநடத்துகிறார், திலக் வர்மா அவரது துணை கேப்டனாக உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்து தாக்குதலை உருவாக்கும் அதே வேளையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
பக்கவாட்டுத் தசைப்பிடிப்பு காரணமாக வருண் சக்கரவர்த்தி ஜப்பான் டி20ஐ மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் விப்ராஜ் நிகம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
1984ல் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) உருவாக்கப்பட்டு 1989 முதல் ஐசிசி-யின் இணை உறுப்பினராக இருக்கிறது அந்த நாடு. 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அனைத்து இணை உறுப்பு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ சர்வதேச டி20 (T20I) அந்தஸ்தை வழங்கியது ஐசிசி.
2022 அக்டோபரில் தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடியது. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தகுதி சுற்றுக்களிலே ஜப்பான் தேர்ச்சி பெறுவது இல்லை என்பதால் இந்தியாவுடன் விளையாட வாய்ப்பு பெற்றது இல்லை. இருதரப்பு தொடர்களும் அந்தந்த அணிகளுக்கு இணையான திறன் கொண்ட அணிகளுடனே விளையாடப்படுவதால் ஜப்பான் இதுவரை பப்புவா நியூ கினியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய அணிகளுடன் மட்டுமே விளையாடி வந்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்