விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை: மாஸ்டர் பிளானில் பிசிசிஐ

சர்வதேச இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த அடுத்த இரு தினங்களில் தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது. இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 இருப்பினும் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியமே நடத்தும் என சொல்லப்படுகிறது. போட்டிகளை அமீரகம் மற்றும் ஓமனில் நடத்துவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பும் என பேசப்படுகிறது. கொரோனா அச்சத்தால் கடந்த மே மாதத்தில் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முடிக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது.